)
இந்திய அணியின் முன்னணி கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான ரோகித் சர்மா கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியவுடன், டி20 வடிவில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் இந்தாண்டு மே மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாகவே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். இதனால் அவர் தனது முழு கவனத்தையும் ஒருநாள் போட்டிகளிலேயே செலுத்த உள்ளார். குறிப்பாக 2027 ஒருநாள் உலகக்கோப்பை வரை விளையாடுவதே அவரது விருப்பம் எனவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் சில மாதங்களாகவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த ஒருநாள் தொடர் ரோகித் சர்மாவின் கடைசி தொடராக அமையும் என கூறப்பட்டு வருகிறது. மறுபுறம் வீரர் ரோகித் தனது ஓய்வு குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அமைதியாக இருந்தார். இந்த நிலையில், தனது ஓய்வு குறித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் நான் இங்கே தான் உள்ளேன். இது நன்றாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
கம்பேக் அறிவிப்பு
சமீபத்தில் தனது சமூக வலைத் தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ரோகித். அதில் வலைப்பயிற்சியில் உற்சாகமாக பேட்டிங் செய்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. "I am here again, it feels really good" எனும் வாசகத்துடன் பதிவிட்டுள்ள அவர், தான் முழு உடல் ஆரோக்கியத்தோடும் சிறந்த உடல் விகாரத்தோடும் இருக்கிறேன் என அறிவித்துள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடம் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா தொடர் விவரம்
இந்த அறிவிப்புடன் அவர் ஆஸ்திரேலியா தொடரில் விளையாடுவது உறுதியாகி உள்ளது. இந்திய அணி அக்டோபர் 19 முதல் 25 வரை நடைபெறவுள்ள 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. இதில் ரோகித் சர்மா மீண்டும் நீல ஜெர்சியில் களம் காண உள்ளார். அவர் சர்வதேச போட்டியில் விளையாடி பல மாதங்கள் ஆகிவிட்டதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
ரோகித்தின் ஒருநாள் சாதனைகள்
2007-ம் ஆண்டு முதல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி வரும் ரோகித் சர்மா இதுவரை 273 போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். 32 சதங்கள் மற்றும் 58 அரைசதங்கள் அடித்துள்ளார். மொத்தம் 11,168 ரன்களை குவித்துள்ளார். அவரது 'ஹிட்மேன்' வித்தைகள் மீண்டும் ஓர் முறை ரசிகர்களை உற்சாகபடுத்தும் நிலையில், இந்த ஆஸ்திரேலிய தொடர் இந்திய அணிக்கும், ரோகித் சர்மாவின் ஒருநாள் பயணத்துக்கும் ஒரு முக்கிய கட்டமாக அமையப்போகிறது.