ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஏப்ரல் 13 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அறிமுக வீரர் சாகிப் ஹுசைன் உள்ளார். யார் இவர்? அவரின் பின்னணி என்ன என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னிலையில் உள்ளது. இதுவரை இத்தொடரில் சிறப்பாக விளையாடி வந்த அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இப்போட்டியில் வென்றது. இந்த மாபெரும் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவர் சாகிப் ஹுசைன். அவர் 4 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார். அவர் யார்? அவரது பின்னணி என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 21 வது ஐபிஎல் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியே முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 216 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 91 ரன்களை அடித்திருந்தார். இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணி இந்த இலக்கை எளிதில் துரத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம், இதற்கு முன்பான போட்டிகளில் அந்த அணி விளையாடிய விதம். ஆனால், இப்போட்டி அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை. வழக்கமாக அதிரடி காட்டும் சூர்யவன்சி முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் துரூவ் ஜுரேல், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் ஆகியோரும் டக் அவுட் ஆகி வெளியேறினர். இவர்களை மற்றொரு அறிமுக வீரரான பிரஃபுல் ஹிங்கே வீழ்த்தினார்.
இதையடுத்துதான் இரண்டாவது ஓவரை வீச சாகிப் ஹுசைன் வந்தார். அவர் வீசிய நான்காவது பந்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து டோனோவன் ஃபெரைரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சேர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரன்களை சேர்த்தனர். இருவரும் சேர்ந்து 12 ஓவர்கள் களத்தில் நின்று 118 ரன்களை குவித்து ஒரு வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்து அணியை மீட்டெடுக்க முயன்றனர்.
இந்த நிலையில், 15வது ஓவரை வீச வந்த சாகிப் ஹுசைன் இந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். 69 ரன்கள் குவித்திருந்த டோனோவன் ஃபெரைராவை போல்டு செய்து ஆட்டமிழக்க செய்தார். இது அவரது இரண்டாவது விக்கெட். இதையடுத்து ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரையும் வீழ்த்தி மொத்தமாக 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். ஒரு அறிமுக வீரராக களமிறங்கிய அவர் தனது செயல்திறன் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க செய்திருக்கிறார்.
21 வயதாகும் சாகிப் ஹுசைன் பிகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு 4 சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர். இவர் அந்த குடும்பத்தில் இரண்டாவது மகன் ஆவார். இவரின் தந்தை கூலி வேலை பார்த்து வந்தார். வறுமையால் சிரமப்படும் தனது குடும்பத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாடுகிறார். அதில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் தனது குடும்பத்திற்கு உதவி செய்து வந்தார். இவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக வந்தவர்தான் பயிற்சியாளர் ராபின்சன். இவரை சந்தித்த பின்னர்தான் சாகிப் ஹுசைன் டென்னிஸ் பந்தில் இருந்து லெதர் பால் கிரிக்கெட்டுக்கு மாறுகிறார். அவரின் திறமையை கண்ட கிரிக்கெட் அகடாமி அவருக்கு பல உதவிகளை செய்கிறது. அவரும் பல விஷயங்களை தனது கோச் ராபின்சனிடம் இருந்து கற்றுக்கொள்கிறார். ராபின்சன் சாகிப் ஹுசைனுக்கு மட்டுமல்ல பிகாரில் வைபவ் சூர்யவன்சி-க்கும் கோச்சாக இருந்துள்ளார்.
தனது திறமைகளை வளர்த்து கொண்ட சாகிப் ஹுசைன் பிகாரின் U19 அணியில் விளையாடி அதிக விக்கெட்களை எடுக்கிறார். இதையடுத்து அவரை சையது முஷ்டாக் அலி டிராபியில் விளையாட வைக்கின்றனர். அங்கு விக்கெட்களை குவிக்கவில்லை என்றாலும், தனது பந்து வீச்சின் வேகத்தை வைத்து பலரின் கவனத்தை பெறுகிறார். அவரை பிகார் ரபாடா என பாராட்டப்படுகிறார். இதற்கு அவரின் பந்து வீச்சின் வேகமே முக்கிய காரணம்.
இதனைத் தொடர்ந்து இவரின் திறமையை கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை தேர்வு செய்கிறது. ஓராண்டாக அந்த அணியின் நெட் பவுலராக இருக்கிறார். இதையடுத்து 2024ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை வாங்குகிறார்கள். அங்கு பரத் அருண் மற்றும் அபிஷேக் நாயரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்கிறார். பின்னர் ஆஸ்திரேலியா முன்னாள் ஸ்டார் பவுலரான கிளென் மெக்ராத்துடனும் இருந்து தனது திறமையை வளர்த்து கொள்கிறார்.
தனது வாய்ப்புக்காக காத்திருந்த சாகிப் ஹுசைக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல்லில் அறிமுகம் ஆகும் வாய்ப்பு கிடைக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக களமிறங்குகிறார். 4 விக்கெட்களை கைப்பற்றுகிறார். புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணியை எப்படி 3 போட்டிகளில் தோற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்த போகிறது என்ற கேள்வி இருந்த நிலையில், அந்த அணியை எஸ்ஆர்ஹெச் வெல்வதற்கு முக்கிய பங்காற்றி இருக்கிறார் சாகிப் ஹுசைன்.
21 வயதே ஆகும் ஒரு இளைஞன் தற்போது உலகையே திரும்பி பார்க்க செய்திருக்கிறார். ஐபிஎல் போன்ற ஒரு தொடரில் தனது முதல் போட்டியிலேயே 4 விக்கெட்கள் என்பது நினைத்து பார்க்க முடியாதவை. அப்படியான ஒரு சாதனையை நிகழ்த்தி தனக்கான டிமாண்ட்டை உயர்த்தியுள்ளார் சாகிப் ஹுசைன்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ