)
Shivam Dube T20I Winning Streak Ends: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே, 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றிவிட்டது. தொடர்ந்து தற்போது டி20ஐ தொடர் நடைபெற்று வருகிறது.
கான்பெராவில் நடந்த முதல் டி20ஐ போட்டி மழையால் கைவிடப்பட்டது, எனவே அப்போட்டிக்கு முடிவு ஏதுமில்லை. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த 2வது டி20ஐ போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் கடுமையாக சொதப்பி 126 ரன்களையே இலக்காக நிர்ணயித்தது. அபிஷேக் சர்மா அரைசதம் அடிக்க, நம்பர் 7இல் இறங்கிய ஹர்ஷித் ராணா 35 ரன்களை அடித்து ஆறுதல் அளித்தார். இந்த இருவரை தவிர்த்து மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் நேற்று ஆட்டமிழந்தனர்.
இந்திய அணியின் இந்த எளிய இலக்கை, ஆஸ்திரேலியா 13.2 ஓவர்களிலேயே அடித்துவிட்டது. 40 பந்துகள் மீதம் வைத்து வெற்றியை பதிவு செய்தது. இந்தியாவின் இந்த மோசமான தோல்வியின் மூலம் ஷிவம் தூபேவின் பல ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அப்படியென்ன சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது என்பதை இங்கு காணலாம்.
தூபே நேற்றைய போட்டியோடு மொத்தம் 43 டி20ஐ போட்டிகளில் விளையாடியிருக்கிறார். ஆனால், இவர் விளையாடி இதுவரை மூன்று போட்டிகளில் மட்டுமே இந்தியோ தோல்வியை தழுவியுள்ளது. 2019ஆம் ஆண்டு நவம்பரில் இந்தியாவில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான டி20ஐ தொடரில் இவர் அறிமுகமானார். அந்த தொடரின் முதல் போட்டி டெல்லியில் நடந்தது. அந்த போட்டியில் வங்கதேசம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, அதே 2019ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் நடந்த மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டி20ஐ போட்டியில் (திருவனந்தபுரம்) துபே விளையாடியபோது இந்தியா தோல்வியடைந்தது.
அந்த போட்டிக்கு தூபே டி20ஐ போட்டிகளில் விளையாடி, இந்திய அணி நேற்றுதான் தோற்றிருக்கிறது. அதாவது, 2019ஆம் ஆண்டு டிசம்பரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 3வது டி20ஐ போட்டியில் இருந்து தூபே விளையாடிய 37 போட்டிகளில் 34 போட்டிகளில் இந்தியா வென்றிருக்கிறது, 3 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டிருக்கிறது. சுமார் 2151 நாள்களுக்கு பின் தூபேவின் இந்த சாதனை முடிவுக்கு வந்துள்ளது.
இருப்பினும், டி20ஐ போட்டிகளை பொருத்தவரை, அதிக போட்டிகளை விளையாடி தோல்வியையே தழுவாமல் இருந்த வீரர்களின் பட்டியலில் ஷிவம் தூபே முதலிடத்தில் உள்ளார். ஷிவம் தூபே 2019ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை 37 போட்டிகளில் விளையாடி தோல்வியே தழுவாமல் இருந்தார். உகாண்டா அணியின் பாஸ்கல் முருங்கி 2022ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை 27 போட்டிகளில் விளையாடி தோல்வியே தழுவாமல் இந்த பட்டியிலில் இரண்டாமிடத்தில் உள்ளார்.
இந்திய வீரரான ஜஸ்பிரித் பும்ரா 2021ஆம் ஆண்டு முதல் 2025ஆம ஆண்டு வரை 24 போட்டிகளில் விளையாடி தோல்வியே அடையாமல் இந்த பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீரரான மனீஷ் பாண்டே 2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டுவரை 20 போட்டிகளில் தோல்வியே அடையாமல் இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ