)
Shreyas Iyer Injury Update: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஓடிஐ தொடர் கடந்த வாரம் நிறைவடைந்தது. அதில் மூன்றாவது ஓடிஐ போட்டியை இந்திய ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள்.
மூன்றாவது ஓடிஐ போட்டி கடந்த அக்.25ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா சதம் அடித்தும், விராட் கோலி அரைசதம் அடித்தும் அசத்தினர். இந்திய அணி 1-2 என்ற கணக்கில் ஓடிஐ தொடரை இழந்தாலும், கடைசி போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும், தொடர் நாயகன் விருதையும் வென்று ரோஹித் சர்மா பெரும் ஆறுதல் அளித்தார்.
அந்த வகையில், மூன்றாவது போட்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி ஒன்றையும் கொடுத்தது. ஹர்ஷித் ராணா பந்துவீச்சில், அலெக்ஸ் கேரி கொடுத்த கேட்ச்சை பின்னால் ஓடி சென்று ஷ்ரேயாஸ் ஐயர் வெற்றிகரமாக பிடித்தார். ஆனால் அவர் தரையில் விழுந்து கேட்ச் பிடித்தபோது அவரது விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை சிட்னி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஷ்ரேயாஸ் ஐயர் காயம் குறித்து முதற்கட்டமாக கடந்த அக். 27ஆம் தேதி பிசிசிஐ கூறியதாவது, "2025ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி அன்று சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்யும் போது ஷ்ரேயாஸ் ஐயரின் இடது கீழ் விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. மேலும் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஸ்கேன் செய்து பார்த்ததில் மண்ணீரல் பகுதியில் ஒரு பெரிய காயம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர் சிகிச்சையில் உள்ளார். மருத்துவ ரீதியாக நிலையாக இருக்கிறார் மற்றும் நன்றாக குணமடைந்து வருகிறார்" என தெரிவித்தது. தொடர்ந்து, சிட்னி மற்றும் இந்தியாவில் உள்ள நிபுணர்களுடன் கலந்தாலோசித்து பிசிசிஐ மருத்துவக் குழு அவரது காயத்தின் நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்றும் இந்திய அணி மருத்துவர் ஷ்ரேயாஸின் அன்றாட முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக சிட்னியில் அவருடன் இருப்பார் என்றும் தெரிவித்தது.
இதையடுத்து, ஷ்ரேயாஸ் ஐயர் காயம் குறித்த இரண்டாவது அப்டேட்டை பிசிசிஐ நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், "காயம் உடனடியாக அடையாளம் காணப்பட்டது, மேலும் இரத்தப்போக்கு உடனடியாக நிறுத்தப்பட்டது. அவரது உடல்நிலை இப்போது சீராக உள்ளது. மேலும் அவர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார். அக்டோபர் 28ஆம் தேதி அன்று மீண்டும் ஸ்கேன் செய்யப்பட்டதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, மேலும் ஷ்ரேயாஸ் குணமடைந்து வருகிறார். சிட்னி மற்றும் இந்தியாவில் உள்ள நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, பிசிசிஐ மருத்துவக் குழு அவரது முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்கும்" என குறிப்பிட்டிருந்தது.
ஷ்ரேயாஸ் ஐயர் காயம் குறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா கூறுகையில், ஷ்ரேயாஸ் ஐயருக்கு அறுவை சிகிச்சை இல்லை என்றும் ஆனால் வேறு ஒரு முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது, அதனால்தான் அவர் இவ்வளவு விரைவாக குணமடைந்தார் என்றும் தெரிவித்தார். மேலும் ஷ்ரேயாஸ் ஐயர் இப்போது பேசுகிறார், சிரிக்கிறார், செவிலியர்களுடன் ஜோக் செய்து வருகிறார் என்றும் சைக்கியா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் அவரது X பக்கத்தில், "தற்போது நான் குணமடைந்து வருகிறேன், ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் கண்டு வருகிறேன். எனக்குக் கிடைத்த அனைத்து அன்பான வாழ்த்துக்களையும் ஆதரவையும் கண்டு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன். என்னை உங்கள் எண்ணங்களில் வைத்திருந்ததற்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.
— Shreyas Iyer (@ShreyasIyer15) October 30, 2025
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ