)
தென்னாப்பிரிக்கா அணியின் இளம் வீரர் "பேபி ஏபி" என்று அழைக்கப்படும் டிவால்ட் பிரெவிஸ் சமீபத்திய தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறார். சென்னை அணியில் மாற்று வீரராக இடம் பெற்றதில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற SA20 லீக் ஏலத்தில் ஒரு புது வரலாற்று சாதனை படைத்துள்ளார். இது அனைவரது மத்தியிலும் பேசுபொருள் ஆகி உள்ள நிலையில், இந்த பணத்தால் ஏற்படும் அழுத்தத்தை சமாளிப்பது எப்படி என்பது குறித்து, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ஹென்ரிச் கிளாசென் பிரெவிஸுக்கு ஒரு முக்கியமான அறிவுரையை வழங்கியுள்ளார்.

SA20 தொடரின் நான்காவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இதில், பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணி, டிவால்ட் பிரெவிஸை R16.5 மில்லியன் இந்திய மதிப்பில் சுமார் ரூ.8.31 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம், SA20 வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன பேட்ஸ்மேன் என்ற சாதனையை பிரெவிஸ் படைத்துள்ளார். கடந்த சீசன்களில் எம்.ஐ கேப் டவுன் அணிக்காக விளையாடிய பிரெவிஸ், கடந்த சீசனில் 10 போட்டிகளில் 48.50 சராசரியுடன் 291 ரன்களை 184.17 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில், தனது அணிக்கு முதல் கோப்பையை வென்று தருவதில் முக்கிய பங்கு வகித்தார்.
இந்த மிகப்பெரிய ஏலத்தொகை, ஒரு இளம் வீரருக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த ஹென்ரிச் கிளாசென், ஜியோஹாட்ஸ்டார் நிகழ்ச்சி ஒன்றில் பிரெவிஸுக்கு அறிவுரை வழங்கினார். அவர் கூறியதாவது, "பிரெவிஸ் ஒரு விஷயத்தை தெளிவாக நினைவில் கொள்ள வேண்டும். அவருக்கு கிடைத்துள்ள இந்த விலை, அவர் எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல. அவர் ஏற்கனவே என்ன சாதித்துள்ளார் என்பதற்கான ஒரு பரிசு. இந்த கிரிக்கெட் விளையாட்டில், நீங்கள் எவ்வளவு கடினமாக பயிற்சி செய்தாலும், முதல் பந்திலேயே ஆட்டமிழக்க நேரிடலாம். அது இந்த விளையாட்டின் ஒரு பகுதி.
இந்த விலை, அவரது கடந்தகால சிறப்பான ஆட்டங்கள், அவரது கடின உழைப்பு மற்றும் அவர் ஒரு சிறந்த வீரராக உருவாவதற்கு தேவையான அனைத்து தகுதிகளையும் கொண்டிருக்கிறார் என்பதற்கு கிடைத்த அங்கீகாரம். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவரது அணி அவரை விடுவிக்காது என்று நான் நம்புகிறேன். எனவே, இந்த காலகட்டத்தை அடுத்த ஏலத்திற்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்ளவும், தனது திறமையை மேலும் வெளிப்படுத்தவும் அவர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால், அடிப்படையில் இந்த பிரம்மாண்டமான விலை, அவரது கடந்த கால சாதனைகளுக்கும், அவரிடம் இருக்கும் திறமைக்கும் கிடைத்த ஒரு வெகுமதி மட்டுமே" என்று கிளாசென் கூறியுள்ளார்.
22 வயதே ஆன டிவால்ட் பிரெவிஸ், தென்னாப்பிரிக்காவுக்காக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி, தற்போது டி20 போட்டிகளில் உச்சகட்ட பார்மில் இருக்கிறார். இந்த ஆண்டில் மட்டும் 30 டி20 இன்னிங்ஸ்களில் 43.26 சராசரியுடன், 186க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் 995 ரன்களை குவித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் ஆறு அரைசதங்கள் அடங்கும். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில், 56 பந்துகளில் 125 ரன்கள் அடித்து, தென்னாப்பிரிக்காவுக்காக அதிவேகமாக சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். கிளாசெனின் இந்த அறிவுரை இளம் வீரரான பிரெவிஸ், பணத்தால் ஏற்படும் அழுத்தத்தில் சிக்காமல், தனது இயல்பான ஆட்டத்தின் மீது மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ