India vs England Match Highlights: இந்தியா - இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது அரையிறுதிப் போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. வான்கடே மைதானமே உரத்த குரலில் இந்திய அணிக்காக கொண்டாடி தீர்த்தது. தோனி, ரோஹித் உள்பட பல மூத்த வீரர்கள் இந்திய அணியை பாராட்டி மகிழ்ந்தனர்.
எகிறிய BP
254 ரன்களை இலக்காக நிர்ணயித்தாலும், இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்டிங்கால் கடைசி ஓவர் வரை திக் திக் நொடிகளாகவே இருந்தது. இன்றைய போட்டி, பார்வையாளர்களின் ரத்த அழுத்தத்தை நிச்சயம் அதிகரிக்கச் செய்திருக்கும். இந்திய அணிக்கு டிராவிஸ் ஹெட் கொடுத்த தலைவலியை விட ஜேக்கப் பெத்தெல் இன்றைய ஆட்டத்தை வென்று கொடுத்து பெரிய தலைவலியை கொடுத்திருப்பார்.
பவர்பிளேவில் இங்கிலாந்து இழந்த 3 விக்கெட்டுகள்
ஆனால், ஒரு வழியாக முட்டிமோதி இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் பில் சால்ட் 5, ஹாரி புரூக் 7, ஜாஸ் பட்லர் 25 என பவர்பிளேவிலேயே ஆட்டமிழந்தனர். பவர்பிளே முடிவில் 3 விக்கெட்டை இழந்து 68 ரன்களை இங்கிலாந்து எடுத்தது. பெத்தல் 5வது ஓவரில் உள்ளே நுழைந்தார், ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் அலறவைத்தார்.
ஜேக்கப் பெத்தெல் மிரட்டல் ஆட்டம்
வருண் வீசிய 6வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அதற்கு தொடக்கமாக அமைந்தது. அடுத்தடுத்த ஓவர்களில் ரன்களை குவித்தார். 19 பந்துகளில் அரைசதம் கடந்தார். டாம் பான்டன் 17(5) ரன்களில் ஆட்டமிழந்தாலும், வில் ஜாக்ஸ் அவருடன் கைக்கோர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டினார். இந்த ஜோடி 39 பந்துகளில் 77 ரன்களை குவித்தது.
18 பந்துகளில் 45 ரன்கள் தேவை
வில் ஜாக்ஸ் 35 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாம் கர்ரணும், பெத்தலுக்கு கைக்கொடுத்தார். வருண் வீசிய 15வது ஓவரில் 13 ரன்கள், பும்ரா வீசிய 16வது ஓவரில் 8 ரன்கள், அர்ஷ்தீப் வீசிய 17வது ஓவரில் 16 ரன்கள் என இங்கிலாந்து அடிக்க, அந்த அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று ஓவர்களில் 45 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப், வருண் ஆகியோர் தலா 4 ஓவர்களை வீசிவிட்டார்கள், கடைசி 3 ஓவரை வீச பும்ரா, ஹர்திக் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோருக்கு மட்டும் தலா 1 ஓவர் இருந்தது. தூபே இந்த போட்டியில் ஒரு ஓவரை கூட வீசவில்லை.
பும்ராவின் மேஜிக்
இங்குதான் பும்ரா இந்தியாவின் வெற்றிக்கு சிறப்பாக பங்காற்றினார். அவர் வீசிய 18வது ஓவரில் பவுண்டரி எதையும் கொடுக்காமல் வெறும் 6 ரன்களையே கொடுத்தார். இதனால் கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்து பெத்தல் 45 பந்துகளில் சதத்தை பதிவு செய்தார். டி20 உலகக் கோப்பையில் அதிவேகமாக அடிக்கப்பட்ட 2வது சதம் இதுவாகும். இந்த ஓவரில் சாம் கர்ரண் 18 ரன்களில் ஆட்டமிழந்தார. மொத்தமாக அந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. இதனால் இங்கிலாந்து அணிக்கு கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டது.
கடைசி ஓவர் திக் திக்
கடைசி ஓவர் அக்சர் பட்டேலுக்கு பதில் வேகப்பந்துவீச்சாளர் ஷிவம் தூபேவுக்கு வழங்கப்பட்டது. அந்த ஓவரின் முதல் பந்திலேயே இரண்டு ரன்கள் ஓட முயன்றபோது, 2வது ரன்னில் ஜேக்கப் பெத்தெல் ரன்-அவுட்டானார். ஹர்திக் பாண்டியாவின் அற்புதமான த்ரோவால் பெத்தெல் ஆட்டமிழந்தார். பெத்தெல் 48 பந்துகளில் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களை பறக்கவிட்ட நிலையில், 105 ரன்களை எடுத்து வெளியேறினார். அடுத்தடுத்த பந்துகளை ஷிவம் தூபே சிறப்பாக வீசிய தலா 1 ரன்னை கொடுத்தார். கடைசி மூன்று பந்துகளில் ஆர்ச்சர் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்தும், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன்
இந்திய அணியின் பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட், பும்ரா, வருண், அர்ஷ்தீப், அக்சர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர். முன்னதாக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் 89, ஷிவம் தூபே 43, இஷான் கிஷன் 39, ஹர்திக் பாண்டியா 27, திலக் வர்மா 21 என ரன்களை குவித்திருந்தனர். சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்ஸர் என 89 ரன்களை அடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். தொடர்ந்து 2வது போட்டியாக அவர் ஆட்டநாயகன் விருதை வென்றார். அக்சர் பட்டேல் இன்றைய போட்டியில் 3 முக்கிய கேட்ச்களை சிறப்பாக பிடித்ததும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
மேலும் படிக்க | பெண்ணிடம் சில்மிஷம்.. எல்லை மீறிய பாகிஸ்தான் வீரர்! முடிமறைத்த PCB
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









