India National Cricket Team: இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் மோதி வருகிறது. நாக்பூரில் நடந்த முதல் டி20ஐ போட்டியை இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
Team India: இந்திய அணியின் தொடர் வெற்றி
1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றிருக்கும் நிலையில், ராய்ப்பூரில் இன்று இரண்டாவது டி20ஐ போட்டி நடைபெற இருக்கிறது. வரும் ஜனவரி 31ஆம் தேதியுடன் டி20ஐ தொடர் நிறைவடைகிறது. அடுத்த ஒரு வார இடைவெளியில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான இந்திய அணி, 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின், சூர்யகுமார் யாதவ் தலைமையில் ஆசிய கோப்பை உள்பட எந்த டி20ஐ தொடரையும் இழக்கவில்லை
Team India: காயத்தில் 2 இந்திய வீரர்கள்
இந்திய அணியின் இந்த தொடர் வெற்றியால் நிச்சயம் இந்த முறையும் உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. அதுவும் டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவிலும், இலங்கையிலும் நடைபெற இருப்பதால் இந்திய அணிக்கான வாய்ப்புகள் இரட்டிப்பாகி உள்ளது. இந்தச் சூழலில், இந்திய அணியின் இரண்டு முக்கிய வீரர்களுக்கு தற்போது காயம் ஏற்பட்டுள்ளது. மிடில் ஆர்டரில் இந்திய அணிக்கு நிலைத்தன்மையை கொடுத்த திலக் வர்மா நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளில் இருந்து விலகியிருக்கிறார்.
தற்போது காயத்தில் இருந்து மீண்டு வரும் அவர் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவாரா இல்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேநேரத்தில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியிருக்கிறார். தற்சமயம் இருவருக்கும் பேக்அப்பாக முறையே ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் நியூசிலாந்து தொடரில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Team India: நம்பர் 3இல் இஷான் கிஷன்
திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இன்னும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நீடிக்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இவர்கள் விலகும்பட்சத்தில் மாற்று வீரர்கள் நீட்டிக்கப்படலாம். மேலும் கடந்த தென்னாப்பிரிக்கா டி20ஐ தொடர் வரை ஓபனிங்கில் விளையாடி வந்த சுப்மான் கில் இத்தொடரில் இடம்பெறவில்லை. மேலும், ரிங்கு சிங் பினிஷிங் வீரராக களமிறங்குகிறார். ஜித்தேஷ் சர்மாவுக்கு இந்திய அணியில் இடம்கொடுக்கவில்லை. மேலும் தற்போது திலக் வர்மா இல்லாத இடத்தில் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Team India: நம்பர் 4ல் சூர்யகுமார் யாதவ்
இந்தச் சூழலில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் நம்பர் 4 இடத்தில் களமிறங்குகிறார். வலது கை பேட்டர் சஞ்சு சாம்சன் முதலில் ஆட்டமிழந்தாலும் கூட இஷான் கிஷனே நம்பர் 3இல் களமிறங்கினார். அதாவது, இதுவரை நம்பர் 3இல் விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் தற்போது நம்பர் 4 இடத்திற்கு மாறியிருக்கிறார். டி20 ஸ்பெஷலிஸ்ட் வீரரான சூர்யகுமார் யாதவ் அதிக பந்துகளை சந்தித்தால் மட்டுமே அதிக ரன்களை குவிக்க முடியும் எனும்போது, சூர்யகுமார் இன்னும் கீழே பேட்டிங்கில் இறங்குவது இந்திய அணிக்கும் சரி, அவருக்கும் சரி பின்னடைவுதான் என கூறப்படுகிறது.
Team India: சூர்யகுமாருக்கு சிறந்த ஸ்பாட் எது?
ஆனால், சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய சிறந்த ஸ்பாட் நம்பர் 4 இடம்தான் என முன்னாள் இந்திய வீரர் முகமது கைப் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் முகமது கைப் கூறியதாவது, "நம்பர் 4 இடத்தில் சூர்யகுமார் யாதவ் ஓரளவு நன்றாகவே விளையாடியிருக்கிறார். அவருக்கு நம்பர் 4 இடமே சிறந்தது என எனக்கு தோன்றுகிறது. இருப்பினும் ஓபனிங் ஜோடி அதிரடியாக விளையாடி, 6-7 ஓவர்கள் வரை பேட்டிங் செய்யும்பட்சத்தில், நம்பர் 3 இடத்தில் சூர்யகுமார் யாதவ் களமிறங்கலாம். ஏனென்றால், சூர்யகுமார் அதிக பந்துகளை சந்தித்தால் அது இந்திய அணிக்கு பலனை கொடுக்கும்.
ஆனால், ஒருவேளை பந்து புதிதாக இருக்கும்போதே விக்கெட் சரிந்துவிட்டால் அடுத்து திலக் வர்மாவையே களமிறக்க வேண்டும். இப்போதைக்கு இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன், ஆனால் அவர் இன்னும் ஒரு இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி ஃபார்மைக் கண்டுபிடித்துவிடுவார். அவர் ஒரு சிறந்த பேட்டர், அற்புதமான பல சாதனையை படைத்தவர் மற்றும் பெரிய போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்" என புகழாரம் சூட்டினார்.
Team India: புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?
கடந்தாண்டு சூர்யகுமார் யாதவ் மொத்தம் 19 இன்னிங்ஸில் விளையாடினார். அதில் 10 போட்டிகளில் அவர் நம்பர் 3 இன்னிங்ஸில் 156 ரன்களையே அடித்தார், ஸ்ட்ரைக் ரேட் 134.48 மற்றும் சராசரி 22.29 ஆக இருந்தது. நம்பர் 4 இன்னிங்ஸில் அவர் வெறும் 62 ரன்களையே அடித்திருக்கிறார், சராசரி 6.89 ஆகவே உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20ஐ போட்டியில் நம்பர் 4 இடத்தில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்ஸர் என 32 ரன்களை அடித்தது இங்கு கவனிக்கத்தக்கது. கைப் சொல்வது போல் ஆட்டத்தின் போக்கை பொறுத்துதான் சூர்யகுமார் யாதவ் களமிறங்க வேண்டும், ஆனால் அதேவேளையில் சூர்யகுமார் யாதவ் அதிக பந்துகளை எதிர்கொள்வதே இந்திய அணிக்கு பெரிய பலனை கொடுக்கும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை.. சீனியர்கள் இல்லாத இந்திய அணி - ரோகித் சர்மா உருக்கம்!
மேலும் படிக்க | இலங்கையா? இந்தியாவா? உலகக்கோப்பையில் வங்கதேசம் விளையாடுமா? 48 மணிநேர கெடு!
மேலும் படிக்க | IND vs NZ: விலகும் அக்சர் படேல்.. காயத்தால் அவதி! அவருக்கு பதில் யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









