ஆஸ்திரேலியாவின் BBL தொடரின் 15வது சீசனில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ரவிச்சந்திரன் அஷ்வின், தொடர் தொடங்குவதற்கு முன்பே அதிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அஷ்வினின் முழங்காலில் காயம் ஏற்பட்டது. இது அவரது BBL பயணத்திற்கு பெரும் தடையாக அமைந்தது.
காயத்தின் தீவிரத்தைத் தொடர்ந்து, அஷ்வினுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் முழுமையாக குணமடைய சில காலம் ஆகும் என்பதால், இந்த சீசன் முழுவதும் அவர் விளையாட மாட்டார் என சிட்னி தண்டர் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஒருவேளை இந்த தொடரில் அஷ்வின் பங்கேற்றிருந்தால், BBL தொடரில் விளையாடிய முதல் இந்திய தேசிய அணி வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்திருப்பார்.
அஷ்வினின் விலகல் குறித்து சிட்னி தண்டர் அணியின் பொது மேலாளர் டிரென்ட் கோப்லாண்ட் கூறுகையில், "அஷ்வின் காயமடைந்தது எங்களுக்கு பேரதிர்ச்சியாகவும், ஏமாற்றமாகவும் உள்ளது. அவர் விரைவில் குணமடைய எங்கள் அணி சார்பில் வாழ்த்துகிறோம்," என்றார்.
அஷ்வின் விளையாட முடியாத போதிலும், அவரை ஒரு வழிகாட்டியாகவோ அல்லது விளம்பர தூதராகவோ அணியுடன் இணைத்து, நீண்ட கால உறவை பேண விரும்புவதாக சிட்னி தண்டர் அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த விலகல் குறித்து அஷ்வின் கூறுகையில், "இந்த அரிய வாய்ப்பை நழுவவிட்டது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. எனது முழு கவனமும் இப்போது காயத்திலிருந்து மீண்டு, முன்பை விட வலுவாகத் திரும்பி வருவதில் தான் உள்ளது," என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.