RCB vs PBKS IPL Finals 2025: ஐபிஎல் 2025 தொடரின் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோத இருக்கின்றன.
RCB vs PBKS Finals: முதல் கோப்பை யாருக்கு?
இரு அணிகளும் 18 வருடங்களாக இந்த ஒரு கோப்பைக்காகவே தவமாய் தவமிருந்து வந்தன. ஆர்சிபியை (Royal Challengers Bengaluru) பொருத்தவரை அனில் கும்ப்ளே (2009), டேனியல் வெட்டோரி (2011), விராட் கோலி (2016) ஆகியோர் தலைமையில் மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தாலும் ரஜத் பட்டிதார் (2025) தலைமையில் முதல்முறையாக கோப்பையை தூக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணி (Punjab Kings) இதுவரை ஒரே ஒருமுறை 2014ஆம் ஆண்டில் ஜார்ஜ் பெய்லி தலைமையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால், அந்த போட்டியிலும் மனீஷ் பாண்டேவின் அதிரடியால் [94 (50) ரன்கள்] கொல்கத்தாவிடம் வீழ்ந்தது பஞ்சாப். சுமார் 11 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போதுதான் ஷ்ரேயாஸ் (Shreyas Iyer) தலைமையில் பிளே ஆப் சுற்றுக்கும், இறுதிப்போட்டிக்கும் அந்த அணி தகுதிபெற்றிருக்கிறது.
RCB vs PBKS Finals: குறுக்கே வரும் மழை
இப்படி இரண்டு அணிகளுமே முதல் போட்டிக்கு முட்டி மோதிக்கொண்டிருக்க, குறுக்கே இந்த கௌஷிக் வந்தால் என்பது அகமதாபாத்தில் மழை குறுக்கிட்டால் நிச்சயம் இரு அணி வீரர்கள் மட்டுமின்றி லட்சக்கணக்கான ரசிகர்களும் கடுப்பாகிவிடுவார்கள். இதே மைதானத்தில் பஞ்சாப் - மும்பை அணிகளுக்கு இடையிலான குவாலியபயர் 2 போட்டியே மழையால் பாதிக்கப்பட்டு சுமார் 2.15 மணிநேரம் தாமதமாகவே தொடங்கியது.
RCB vs PBKS Finals: 2023 இறுதிப்போட்டி ஞாபகம் இருக்கா?
மேலும் கடந்த 2023ஆம் ஆண்டில் இங்கு நடைபெற்ற இறுதிப்போட்டியும் மழையால் முதல் நாள் பாதிப் போட்டி நடந்து, அடுத்த நாளும் மழை குறுக்கிட்டு நள்ளிரவில்தான் முடிவே எட்டியது. அதாவது, மே 25ஆம் தேதி இரவு போட்டி ஆரம்பித்து, அடுத்து மே 26ஆம் தேதி இரவும் தொடர்ந்து, மே 27ஆம் தேதி நள்ளிரவில்தான் சிஎஸ்கே வெற்றிபெற்று 5வது கோப்பையை வென்றது. இந்நிலையில், இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன ஆகும் என்பதை இங்கு காணலாம்.
RCB vs PBKS Finals: இன்று மழை வந்தால் என்ன ஆகும்?
ஆர்சிபி - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதிக்கப்படும்பட்சத்தில் இரவு 9.40 வரையில் ஓவர்கள் ஏதும் குறைக்கப்படாது. அதற்கு முன்னோ அல்லது இரவு 9.40 மணிக்கோ போட்டி தொடங்கும்பட்சத்தில் 20 ஓவர்கள் முழுமையாக வீசப்படும். ஒருவேளை அதையும் தாண்டி மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் நேரத்தை பொருத்து ஓவர்கள் குறைக்கப்படும்.
RCB vs PBKS Finals: இறுதிப்போட்டிக்கு ரிசர்வ் டே
மேலும் குவாலிபயர் 2 போட்டியை போன்று இல்லாமல் இறுதிப்போட்டிக்கு ரிசர்வ் டே இருக்கிறது. அதாவது, மழை குறுக்கிட்டு இன்றிரவுக்குள் போட்டியின் முடிவு தெரியாதபட்சத்தில் நாளையும் ஆட்டம் தொடரும். இன்று ஆட்ட நேரம் கூடுதலாக 2 மணிநேரம் ஒதுக்கப்படும். வழக்கமாக இரவு 11.50 மணிவரையே ஆட்ட நேரமாக பார்க்கப்படும். ஆனால் இறுதிப்போட்டி 2 மணிநேரம் கூடுதலாக ஒதுக்கப்படும்.
RCB vs PBKS Finals: மழையால் போட்டி ரத்தானால் கோப்பை யாருக்கு?
ஒருவேளை நாளையும் போட்டி முழுமையாக மழையால் பாதிக்கப்பட்டு, கூடுதல் நேரத்தையும் தாண்டி சூப்பர் ஓவர் கூட நடக்கவில்லை என்றால், லீக் சுற்றில் எந்த அணி முன்னிலையில் இருந்ததோ அந்த அணிக்கு கோப்பை வழங்கப்படும். ஆனால் இது ஆர்சிபிக்கு பெரும் பின்னடைவாக அமையும். லீக் சுற்று முடிவில் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி இரு அணிகளும் 19 புள்ளிகளை பெற்றிருந்தாலும், நெட் ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப் அணியே முதலிடத்தை பிடித்தது.
RCB vs PBKS Finals: அகமதாபாத்தில் மழை வருமா?
இருப்பினும் குவாலிபயர் 1 போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தி முதல் அணியாக ஆர்சிபி இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருந்தது. எனவே ஆர்சிபி ரசிகர்கள் மழை வரக்கூடாது என நிச்சயம் வேண்டிக்கொள்ள வேண்டும். அகமதாபாத்தில் இன்று மதியம் மழை பெய்ய 66 சதவீத வாய்ப்பு இருப்பதாக (IPL 2025 Rain Chance) கூறப்படுகிறது. இருப்பினும், மாலைக்குள் நிலைமைகள் சீரடைந்து, மழை பெய்யும் வாய்ப்பு 5 சதவீதமாகக் குறையும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், 33 சதவீத மேகமூட்டமான சூழல் நிலவும் என்பது இரு அணிகளுக்கும் சற்று கலக்கத்தை கொடுக்கும் எனலாம்.
மேலும் படிக்க | இன்றுடன் ஐபிஎல்லில் இருந்து ஓய்வை அறிவிக்கும் விராட் கோலி?
மேலும் படிக்க | IPL 2025 Final: வின்னர், ரன்னருக்கு எத்தனை கோடி ரூபாய் பரிசுத் தொகை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









