)
Who Is Gurnoor Brar : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஓடிஐ தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், பலருக்கும் இந்த கேள்வி எழுந்திருக்கும்.
டெஸ்ட் மற்றும் ஓடிஐ அணியில் இடம்பெற்றிருக்கும் குர்னூர் பிரர் யார்...? ஐபிஎல் போட்டிகளில் கூட பெரியளவுக்கு விளையாடாதவர் எப்படி இந்திய அணிக்கு தேர்வானார்...? உள்ளிட்ட கேள்விகள் பலருக்கும் இருக்கும். எனவே, குர்னூர் பிரர் குறித்த முழு விவரத்தை இங்கு காணலாம்.
குர்னூர் பிரர் வலது கை வேகப்பந்துவீச்சாளர் ஆவார். 6 அடி 5 அங்குலம் உயரம் கொண்டவர் (இஷாந்த் சர்மா 6 அடி 4 அங்குலம் என்பது இங்கு கவனிக்கத்தக்கது). இவர் உள்நாட்டு போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
குர்னூர் பிரர் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார், 2019ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் நெட் பௌலராக இருந்தார். இவரை 2025 மெகா ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.1.30 கோடிக்கு எடுத்தது. இவரை எடுக்க சிஎஸ்கே அணி குஜராத் உடன் முட்டிமோதினாலும், ரூ.1.20 கோடிக்கு மேல் ஏலம் கேட்க சிஎஸ்கே முன்வராததால் அவரை குஜராத் கொத்திவிட்டது.
25 வயதான குர்னூர் பிரர் 2023 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஒரே ஒரு போட்டியில் விளையாடினார். அதுதான் அவர் விளையாடிய ஒரே ஐபிஎல் போட்டியாகும். குஜராத் டைட்டன்ஸ் அணியும், அதன் கேப்டன் சுப்மான் கில்லும் இதுவரை குர்னூர் பிரருக்கு வாய்ப்பு வழங்கவே இல்லை.
Meet Gurnoor Brar.
— VIKAS (@Vikas662005) May 19, 2026
- Brar stands exactly 5 feet 6 inches tall.
- He was the net bowler of Mumbai Indians in IPL 2019.
- PBKS signed him as injury replacement in IPL 2023.
- GT signed him as injury replacement in IPL 2024.
- GT buys him for 1.30 CR in IPL 2025.
- Shikhar… pic.twitter.com/exDJj0gmEq
ஐபிஎல் போட்டிதான் இப்போது இந்திய அணிக்கு செல்வதற்கான முக்கிய பாதையாக இருக்கும் சூழலில், வெறும் ஒரு போட்டியில் விளையாடிய வீரரை டெஸ்ட் மற்றும் ஓடிஐ அணியில் வேகப்பந்துவீச்சாளராக பிசிசிஐ தேர்வு செய்துள்ளது பலரின் புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது.
அதற்கு குர்னூர் பிரரின் ஐபிஎல் கேப்டன் சுப்மான் கில் முக்கிய காரணம் என்றாலும், அவரது உள்நாட்டு கிரிக்கெட் அனுபவமே அவருக்கு இந்திய அணியில் இடத்தை உறுதிசெய்துள்ளது. 2022ஆம் ஆண்டில் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமான பிரருக்கு, 2024-25 சீசன் முக்கியமானதாக அமைந்தது.
ரஞ்சி கோப்பையில் வெறும் 7 போட்டிகளில் 26 விக்கெட்டை சரித்தார். பீகார் அணிக்கு எதிரான 14 ரன்களை மட்டுமே எடுத்து 5 விக்கெட்டை எடுத்திருந்தார். இந்த 2025-26 சீசனில் 12 இன்னிங்ஸில் 33 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும் sher-e-punjab தொடரிலும் கடந்த சீசனில் 11 போட்டிகளில் 22 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.
அந்த வகையில், குர்னூர் பிரரின் ஐபிஎல் கேப்டன் சுப்மான் கில்லும் பஞ்சாப் அணிக்காக விளையாடுபவர்தான். எனவே, அவரின் பரிந்துரையில்தான் குர்னூர் பிரருக்கு இந்திய அணியில் இடம்கிடைத்திருக்கிறது. சுப்மான் கில் உடனான நட்பு குறித்து குர்னூர் பிரர் முன்னர் ஒருமுறை, ஊடகம் ஒன்றில் பேசியிருந்தார்.
"எங்களது U-19 காலகட்டத்தில் அவருக்கு (சுப்மான் கில்) பந்துவீசியிருக்கிறேன். அவர் இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, சில கடோச் ஷீல்ட் (பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் பாரம்பரியமிக்க சிவப்பு பந்து தொடர்) போட்டிகளில் விளையாடியது எனக்கு நினைவிக்கிருக்கிறது. நான் பந்துவீசுவதை பார்த்து, மாவட்ட அணியில் இடம்பிடிக்க அவர் உதவி செய்தார். நான் மொஹாலி அணிக்காக விளையாடினேன். பின்னர் பஞ்சாப் 23 வயதுக்குட்பட்டோர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டேன்" என்றார்.
அந்த வகையில், இந்திய டெஸ்ட் மற்றும் ஓடிஐ அணியின் கேப்டன் சுப்மான் கில், தனது படைக்கு தனக்கு தெரிந்த படைவீரரை களமிறக்கியிருக்கிறார். குர்னூர் பிரர் பெரியளவில் சோபித்து, கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தினால் நிச்சயம் பல உயரங்களை தொடுவார், 2027 உலகக் கோப்பை அணியில் இடம்பெறும் வாய்ப்பும் அதிகம்.