கிருஷ்ணகிரியில் துயரம்: கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூன்று வயது ஆண் குழந்தை பலி..!
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் பல்வேறு துயர சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்கின்றன.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில பகுதிகளில் மழை முதல் மிக கனமழை முதல் பெய்து வருகிறது. இதையடுத்து, சமீபத்தில் பெய்த கனமழைக்கு கிருஷ்ணகிரியை சேர்ந்த மூன்று வயது குழந்தை பலியாகியிருப்பது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரியில் கனமழை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தளி அடுத்துள்ள பசவனதொட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு சுரேஷ்-சசிகலா என்பவர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கும் ரக்ஷித் என்ற மூன்று வயது மகன் இருந்தான். இவர்கள் வசித்து வந்த பகுதியிலும் அதை சுற்றியுள்ள பகுதியிலும் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. சுரேஷ் வசித்து வந்ததுதான் அந்த கிராமத்திலேயே பழைய வீடு என்று கூறப்படுகிறது. சமீபத்தில் பெய்த கனமழையால் சுரேஷின் ஓட்டு வீடு மற்றும் சுவர்கள் மழைக்கு நனைந்து இருந்துள்ளன.
சுவர் இடிந்து விழுந்த குழந்தை பலி
நேற்று மாலை சிறுவன் ரக்ஷித் அவர்களின் வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் வீட்டின் சுவர் இடிந்து விளையாடி கொண்டிருந்த சிறுவனின் மீது விழுந்துள்ளது. இதில், சிறுவன் படுகாயமடைந்துள்ளான். இதையடுத்து குழந்தையை மீட்ட பெற்றோரும் உறவினர்களும் அவனை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
உயிரிழப்பு:
மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கி சென்ற பின்னர் மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்துள்ளனர். குழந்தையை பரிசோதித்து டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதை கேட்டதும் குழந்தையின் பெற்றோர் நிலை குலைந்து போயுள்ளனர். மூன்று வயதே நிரம்பிய குழந்தை மழைக்கு பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியில் தொடரும் சோகம்
வருடா வருடம் மழை காலங்களின் போது இவ்வாறு வீடு இடிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்படுவது கிருஷ்ணகிரியல் அடிக்கடி நடைப்பெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரும் கிருஷ்ணகிரி ஓசூர் பகுதியை சேர்ந்த 3 வயது சிறுவன் தூங்கி கொண்டிருக்கும் போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பலியானது அவ்வூர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இது போன்ற சம்பவங்களால் குழந்தைகள் மட்டுமன்றி வயதானவர்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ