நாராயணசாமி விதித்த 4 நிபந்தனைகளை ஏற்க முடியாது: கிரண்பேடி
பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முதலமைச்சர் நாராயணசாமி விதித்த 4 நிபந்தனைகளை ஏற்க முடியாது என புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்!
பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முதலமைச்சர் நாராயணசாமி விதித்த 4 நிபந்தனைகளை ஏற்க முடியாது என புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்!
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் கடந்த சில வருடங்களாகவே யாருக்கு அதிகாரம் என்பதில் போட்டி நிலவிவருகிறது. இந்தநிலையில், அதிகாரப் போட்டியின் உச்சமாக, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு கருப்புச் சட்டை அணிந்து முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆளுநர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதில் தலைமை செயலகத்தில்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி நிபந்தனை விதித்திருந்தார். மேலும் தலைமை செயலாளர், டிஜிபி, துறை செயலாளர்கள் தவிர மற்ற அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க கூடாது என நிபந்தனை விதித்திருந்தார்.
அவர்களது, கடந்த புதன்கிழமை துவங்கிய போராட்டம் தொடர்ந்து 6 ஆவது நாளாக நீடித்து வருகிறது. இதனிடையே டெல்லி சென்ற ஆளுநர் கிரண்பேடி நேற்று மாலை புதுச்சேரி திரும்பினார். இதையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். பேச்சுவார்த்தையில் தலைமை செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருக்க வேண்டும் என அவர் நிபந்தனை விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து முதலமைச்சர் நாரயாணசாமிக்கு கிரண்பேடி எழுதியுள்ள கடிதத்தில், அவர் விதித்த 4 நிபந்தனைகளை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக இந்த விவகாரத்தை நாராயணசாமி இழுத்தடிப்பது போல் தமக்கு தோன்றுவதாக கிரண்பேடி குற்றம்சாட்டியுள்ளார்.