)
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இருப்பினும், தமிழக அரசியல் களத்திற்கு புதிதாக வந்துள்ள தவெக தலைவர் விஜய் ஒரு மாத காலமாக அமைதி காத்து வருகிறார். 2025 செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு, தவெக தலைமையோ அல்லது இரண்டாம் கட்ட தலைவர்களோ எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. சம்பவ இடத்திலும் அவர்கள் இல்லை. வழக்குக்கு பயந்து புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்ட இரண்டாம் கட்ட தலைவர்கள் தலைமறைவாகி உள்ளனர்.
இதனால், மாற்று கட்சிகளின் விமர்சனத்திற்கு கூட, தவெக தரப்பில் இருந்து எந்த பதிலும் இதுவரை வரவில்லை. கரூர் சம்பவத்திற்கு அப்படியே கட்சி முடங்கிவிட்டது. ஒரு மாத காலமாக கட்சி பணிகள் முடங்கி இருந்த நிலையில், நேற்யை தினம் (அக்டோபர் 27) கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார். கரூர் மாவட்டத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்ப்பதற்கு கூட, ஏற்பாடு செய்வதற்கு தவெக தலைவர்கள் களத்தில் இல்லை என்பதே தொண்டர்களின் புலம்பலாக இருக்கிறது.
இப்படியாக கட்சி சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், தவெகவின் முக்கிய தலைவர்கள் மீது விஜய் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் கடந்த ஒரு மாதமாக தலைமறைவாகி உள்ளனர். நிர்மல் குமார் கூட, நேற்றில் இருந்து மீண்டும் கட்சி பணிகளை செய்து வருகிறார். ஆனால், ஆனந்த் எங்கிருக்கிறார் என்றே இதுவரை தெரியவில்லை. தொடக்க காலத்தில் இருந்தே விஜய் ரசிகர் மன்றத்தை நிர்வகிப்பதில் புஸ்ஸி ஆனந்த் முக்கிய பங்காற்றினார்.
விஜயின் நம்பிக்கைக்குரிய ஆளாகவும் ஆனந்த் இருந்து வந்த நிலையில், கரூர் விவகாரத்தில் ஆனந்த் மீது விஜய் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறிது. அதேபோல, கரூர் சம்பவத்தின்போது, டெல்லி வரை சென்று பேசியது ஆதவ் அர்ஜுனா தான். மேலும், செய்தியாளர்கள் சந்திப்பிலும் ஆதவ் அர்ஜுனா கரூர் விவகாரம் குறித்து பேசினார். இதனால், ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெக தலைமை கூடுதல் பொறுப்புகளை வழங்கலாம் என சொல்லப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், தவெக பொதுச் செயலாளராக உள்ள புஸ்ஸி ஆனந்த் பதவி பறிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
புஸ்ஸி ஆனந்த் பதவி பறிக்கப்படும் பட்சத்தில், ஆதவ் அர்ஜுனா பொதுச் செயலாளராக நியமிக்கப்படலாம் என பேச்சுக்கள் அடிப்பட்டு வருகிறது. இதற்கிடையில், 2025 நவம்பர் முதல் வாரத்தில் தவெக சிறப்பு பொதுக் குழு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும், கட்சியின் அடுத்த கட்ட செயல் திட்டம் குறித்தும் விஜய் ஆலோசனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், தவெக தனது தேர்தல் பணிகளை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: நேற்று கரூர் மக்களுக்கு அறுதல் கூறிய விஜய்.. இன்று திமுகவுக்கு எதிராக அறிக்கை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ