Aavin Diwali 2025 Special Sale: தீபாவளி நெருங்குவதால் தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. அரசு ஊழியர்களுக்கு சிறப்பு போன்ஸ் அறிவிப்பு திங்கட்கிழமை வெளியான நிலையில், சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பு அடுத்து வெளியானது. இப்போது, ஆவின் நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை அறிவிப்பும், அங்கு விற்பனை செய்யப்படும் இனிப்பு, கார வகைகளின் விலைப் பட்டியலும் வெளியாகியுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பு விற்பனையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தீபாவளி ஆவின் பொருட்கள் விலை பட்டியல்
தீபாவளி பண்டிகைக்கென ஆவினில் பால்கோவா (250 கிராம்) ரூ.130 விலையிலும், ஸ்பெஷல் மைசூர்பா (250 கிராம்) ரூ.140 விலையிலும், கேரட் மைசூர்பா (250 கிராம்) ரூ.140 விலையிலும், மில்க் சேக் (250 கிராம்) ரூ.140 விலையிலும், முந்திரி கேக் (250 கிராம்) ரூ.185 விலையிலும், ஆவின் மிக்சர் (250 கிராம்) ரூ.85 விலையிலும், பாதாம் மிக்ஸ் பவுடர் (250 கிராம்) ரூ.120 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
அமைச்சர் ராஜேந்திரன் பேச்சு
சேலத்தில் ஆவின் நிறுவனத்தின் பொருட்கள் தீபாவளி சிறப்பு விற்பனையை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமானது அரசு சார்ந்த கூட்டுறவு நிறுவனமாகும். இந்நிறுவனம் கிராமங்களில் உள்ள விவசாய பால்
உற்பத்தியாளர்களின் பொருளாதாரத்தினை முன்னேற்றும் நோக்கிலும், கிராம மற்றும் நகர்புறங்களில் வாழும் பொது மக்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்களை இலாப நோக்கம் அல்லாது சேவை நோக்கோடு நியாயமான விலையில் வழங்கிடும் அத்தியாவசிய பொது சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தமிழ்நாட்டிலேயே பால் மற்றும் பால் உபப்பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.
பொதுமக்களுக்கு விற்பனை
சேலம் ஒன்றியத்தின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 6.50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு அதில் 2.25 லட்சம் லிட்டர் பால் உள்ளூர் விற்பனைக்கும், சென்னை தேவைக்கு 2.70 லட்சம் லிட்டரும் அனுப்பப்படுகிறது. மீதம் உள்ள பாலில் பால் உபபொருட்களான தயிர், மோர், வெண்ணெய், நெய், பால்கோவா, மைசூர்பா, பால்பவுடர், டெட்ரா மில்க், ஜஸ்கீரிம் என அனைத்தும் தயாரிக்கப்பட்டு சில்லரை விற்பனையாளர்கள், ஒன்றிய பாலகங்கள், மொத்த விற்பனையாளர்கள், தனியார் பாலகங்கள் மூலம் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.
விற்பனை இலக்கு நிர்ணயம்
மேலும், சேலம் ஆவின் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய பசும்பாலிலிருந்து எடுக்கப்பட்ட வெண்ணெய், ஆவின் நெய் மற்றும் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுவை மிகுந்த இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் விற்பனை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில், தீபாவளி 2025 பண்டிகையை முன்னிட்டு சேலம் ஒன்றியத்தில் 42 மெட்ரிக் டன் ஆவின் இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்
எனவே, பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யும் பொருட்டு பொதுமக்கள் எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு தூய பசும்பால் மற்றும் நெய்யினால் தயாரிக்கப்படும் ஆவின் இனிப்பு மற்றும் காரவகைகளை வாங்கி பயன்பெறவும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் படிக்க | தமிழ்நாடு அரசின் தீபாவளி போனஸ் : யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?
மேலும் படிக்க | தீபாவளிக்கு சொந்த ஊர் சொல்வோர் கவனத்திற்கு! வெளியான முக்கிய அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









