TN Assembly News: அமலாக்கத்துறை டாஸ்மாக் நிர்வாகத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அந்த விவகாரம் குறித்து விவாதிக்க அதிமுக தரப்பில் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர். குறிப்பாக, 'அந்த தியாகி யார்?' என்ற பேட்ஜ் அணிந்து அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். ஆனால் சபாநாயகர் அந்த கோரிக்கையை ஏற்கவில்லை. மேலும் பேட்ஜை கழட்டிவிட்டு உள்ளே வரும்படி அறிவுறுத்தினார்.
கோரிக்கையை ஏற்காததால் சபாநாயகர் அப்பாவு முன் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமளியில் ஈடுப்ட்டனர். இதைத் தொடர்ந்து 13 அதிமுக உறுப்பினர்களை இன்று ஒருநாள் மட்டும் இடைநீக்கம் செய்வதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் இருந்து வெளியேறினார்.
ஆனால், அதிமுக தரப்பில் செங்கோட்டையன் மட்டும் வெளியேறவில்லை. அவர் பேட்ஜை கழற்றிவிட்டு அவைக்குள் வந்தார். கோபிச்செட்டிப்பாளையம் கழிவுநீர் கலப்பு குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பங்கேற்று செங்கோட்டையன் பேசினார். பேசி முடித்த உடன் பேரவையில் இருந்து வெளியேறி அவரது அலுவலகத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவை வளாகத்தில் இபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது,"கடந்த மாதம் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனையின் முடிவில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்று இருப்பது அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்பாக விசாரிக்க தடை விதிக்க வேண்டும் எனன நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்ட இரண்டு நீதிபதிகள் இந்த வழக்கில் இருந்து விடுவித்துக் கொண்ட நிலையில், இன்று டாஸ்மாக் தொடர்பான வழக்குகளை வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டு இருப்பது குறித்து சட்டப்பேரவையில் ஏன் பேச அனுமதிக்கவில்லை" என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர்,"தமிழகத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையை வேறொரு மாநிலத்துக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளதை பார்க்கும் பொழுது தமிழக அரசு தவறு செய்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிமுக அமைச்சர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் முழுமையாக சந்தித்தோம். முதலமைச்சராக தேர்வான நாள் முதல் இன்று வரை பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துள்ளோம். அவற்றை எதிர்கொள்ள ஒரு நாளும் அஞ்சியதில்லை.
தமிழகத்தின் முதலமைச்சர் ஒரு பொம்மை முதலமைச்சர். சாவி கொடுத்தால் ஒரு பொம்மை எப்படி ஆடுமோ அது போல் தமிழக முதலமைச்சர் ஆடிக்கொண்டிருக்கிறார். தமிழ்நாடு மீனவர்களின் நலனுக்காக இன்று தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள அறிவிப்புகள் அனைத்தும் ஒரு வெற்று அறிவிப்புகள். பல்வேறு பிரச்சனைகளால் நொந்து போய் உள்ள மீனவர்களின் நலனைக் காக்க இதுவரை எந்த திட்டங்களையும் நடைமுறைப்படுத்தாமல் இருந்துவிட்டு தேர்தல் வருவதற்கு 9 மாதங்களுக்கு முன்னதாக இது போன்ற வெற்று அறிவிப்புகளை வெளியிடுவது ஒரு நாடகம்.
தமிழ்நாடு முதலமைச்சர் இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறார். கச்சத்தீவை இலங்கையிடம் தாரை வார்த்தது முதல் அமல்படுத்தியது வரை தமிழக மக்களின் நலனுக்கு எதிராக திமுக அரசு இரட்டை வேடம் போட்டுக் கொண்டு செயல்பட்டது. தமிழக மக்களை ஏமாற்றுவதற்கு திமுகவினரை போல் வேறு யாரும் செயல்பட முடியாது.
ஸ்டாலின் குடும்பத்தினருக்கு மத்தியில் பதவி வேண்டும் என்பதற்காகவே இந்தியா கூட்டணியை வைத்திருக்கிறார். தமிழ்நாடு மக்களின் நலனுக்காக இந்தியா கூட்டணியிடம் இதுவரை எந்த கோரிக்கையையும் ஸ்டாலின் முன் வைத்தது கிடையாது" என்றார்.
மேலும் படிக்க | அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ED ரெய்டு! அதிரடி சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள்..
மேலும் படிக்க | கோவையின் அடையாளத்தை மாற்றும் புதிய திட்டம்! விரைவில் செயல்பாட்டிற்கு வருகிறது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









