இன்னும் 2 வாரங்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில், பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 20ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். பொதுமக்கள் நெரிசலின்றியும், சிரமமின்றியும் பயணம் செய்வதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.

தீபாவளிக்கு பயணம்
தீபாவளி பண்டிகைக்கு முன்பாக, அக்டோபர் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை, நான்கு நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், கூடுதலாக 5,710 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14,268 பேருந்துகள் சென்னையின் பல்வேறு முனையங்களில் இருந்து இயக்கப்படும். தமிழகத்தின் மற்ற முக்கிய நகரங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 6,110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளிக்கு முன்பாக தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் பேருந்துகள் புறப்படும் இடங்கள்
பயணிகளின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சென்னையில் மூன்று முக்கிய பேருந்து முனையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களான திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, செங்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கும் சேலம், கோயம்புத்தூர் போன்ற நகரங்களுக்கும் செல்லும் பேருந்துகள் இங்கிருந்து புறப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகளும், காஞ்சிபுரம், வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், ஓசூர் மற்றும் பெங்களூரு செல்லும் பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்படும். மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் (திருப்பதி, காளஹஸ்தி) பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை வழியாக இயக்கப்படும்.
தீபாவளிக்கு பிந்தைய பயணம்
தீபாவளி பண்டிகை முடிந்து, மக்கள் மீண்டும் தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கு திரும்புவதற்கு வசதியாக, அக்டோபர் 21 முதல் 23ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 4,253 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் மற்ற நகரங்களுக்கு இடையே 4,600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளிக்கு பிறகு, மொத்தமாக 15,129 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பேருந்துகளுக்கான பயணச்சீட்டுகளை, www.tnstc.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவும், TNSTC செயலி மூலமாகவும் மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த சிறப்பு ஏற்பாடுகள் போக்குவரத்துத் துறை, காவல்துறை, மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியுடன் செயல்படுத்தப்படுவதால், பொதுமக்கள் இந்த தீபாவளி பண்டிகையை எவ்வித இடையூறுமின்றி தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழலாம்.
மேலும் படிக்க: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய குட் நியூஸ்! தீபாவளி போனஸ் அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









