தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, முழுநேரமாக பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத ஊக்கத்தொகை ரூ.4,000-லிருந்து ரூ.10,000 ஆகவும், பகுதி நேரமாக பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.2,000-லிருந்து ரூ.5,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிரடி உயர்வு, மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயிற்சி பள்ளி
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், தமிழகம் முழுவதும் மொத்தம் 18 பயிற்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 6 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள், 6 ஓதுவார் பயிற்சி பள்ளிகள், 3 தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சி பள்ளிகள், 2 வேத ஆகம பாடசாலைகள் மற்றும் ஒரு திவ்ய பிரபந்த பாடசாலை ஆகியவை அடங்கும். இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உணவு, உடை மற்றும் உறைவிடம் போன்ற அடிப்படை வசதிகளுடன், மாதந்தோறும் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
ஊக்கத்தொகை உயர்வு
கடந்த 2022-ஆம் ஆண்டு வரை, முழுநேர மாணவர்களுக்கு ரூ.1,000 மற்றும் பகுதிநேர மாணவர்களுக்கு ரூ.500 என வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை, 2023-ஆம் ஆண்டு முதல் படிப்படியாக உயர்த்தப்பட்டது. 2023-ல் முழுநேர மாணவர்களுக்கு ரூ.3,000 ஆகவும், 2024-ல் ரூ.4,000 ஆகவும் உயர்த்தப்பட்டது. அதே போல், பகுதிநேர மாணவர்களுக்கு 2023-ல் ரூ.1,500 ஆகவும், 2024-ல் ரூ.2,000 ஆகவும் ஊக்கத்தொகை அதிகரிக்கப்பட்டது. தற்போது, 2025-ஆம் ஆண்டு முதல் இந்த தொகையை மேலும் அதிகரித்து, முழுநேர மாணவர்களுக்கு ரூ.10,000 மற்றும் பகுதிநேர மாணவர்களுக்கு ரூ.5,000 என தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.
யாரெல்லாம் தகுதியானவர்கள்?
இந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற, மாணவர்கள் இந்து சமய கோட்பாடுகளை பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 14 முதல் 24 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் இந்த பயிற்சி திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள். ஓராண்டு சான்றிதழ் படிப்பான இந்த பயிற்சியில், சைவ-வைணவ முறைப்படி தமிழ் மற்றும் ஆகமங்கள் முழுமையாக கற்றுத்தரப்படும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த பயிற்சி பள்ளிகள் அமைந்துள்ளன. குறிப்பாக மதுரை, திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி ஆகிய இடங்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளும், திருவல்லிக்கேணி, ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்புதூர், நாமக்கல் ஆகிய இடங்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளும் செயல்படுகின்றன.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த பயிற்சி பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள், விண்ணப்ப படிவங்களை அந்தந்த திருக்கோயில் அலுவலகங்களில் நேரடியாக பெற்று கொள்ளலாம். மேலும், திருக்கோயில்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளமான https://hrce.tn.gov.in மூலமாகவும் கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ளலாம். தமிழக அரசின் இந்த புதிய திட்டம், பாரம்பரிய கலைகள் மற்றும் ஆகம விதிகளை கற்க விரும்பும் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த ஊக்கத்தொகை உயர்வு, மேலும் பல மாணவர்களை இப்பயிற்சி பள்ளிகளில் சேர ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









