அமமுக-வில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் டிடிவி தினகரன் அணியில் இணைந்த கலைராஜன் அமமுக-வின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இயங்கி வந்தார். இந்நிலையில்,  அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட கட்சியின் அனைத்து பதவியிலிருந்தும் நீக்குவதாக நேற்று டிடிவி தினகரன் அறிவித்தார். இதனையடுத்து திமுகவில் வி.பி.கலைராஜன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானது.



இந்நிலையில், திருச்சியில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், வி.பி.கலைராஜன் திமுகவில் இணைந்தார். அப்போது ஏற்கெனவே அமமுக-வில் இருந்து திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி உடனிருந்தார்.


இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வி.பி.கலைராஜன், "திராவிட இயக்கம் பட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காகவும், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் இணைந்து உருவாக்கிய திமுக தழைத்து விளங்க தகுதியான தலைமை மு.க.ஸ்டாலின் தான். இழந்து விட்ட தமிழர்களின் உரிமைகளை மீண்டும் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் ஸ்டாலின் தலைமையை ஏற்று திமுகவில் இணைந்துள்ளேன்" என தெரிவித்துள்ளார்.


மேலும் பிரதமர் மோடி, பாஜக குறித்து கிஞ்சுற்றும் அஞ்சாமல், என்ன விளைவுகள் வந்தாலும் அதனை சந்திக்கத் தயார் என்ற அடிப்படையில், தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதே தலையாய பணி என்று நினைப்பவர் ஸ்டாலின். ஸ்டாலினை தலைவராகக் ஏற்றுக்கொன்டதில் பெருமை, மகிழ்ச்சி. அவர் சுட்டு விரல் நீட்டினால் சிட்டாக பறந்து எந்த பணியானாலும் அதனை நிச்சயமாக செய்து முடிப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.