)
Horse Trading Allegations On TVK: விறுவிறுப்பான மசாலா சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு தமிழ்நாடு அரசியல் களம் கடந்த சில நாள்களாக பரபரப்புடன் காணப்படுகிறது.
பெரும்பான்மை இருப்பதாக கூறி ஆட்சியமைக் கோரி தவெக தலைவர் விஜய் நேற்று (மே 8) தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்தார். சிபிஐ, சிபிஎம் ஆதரவு கடிதம் அளித்த நிலையில், அமமுக எம்எல்ஏவிடம் ஆதரவு கடிதம் பெற்று, அதை நேற்று ஆளுநரிடம் சமர்பித்ததாக கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணி சார்பில் மன்னார்குடி தொகுதியில் அமமுகவின் காமராஜ் போட்டியிட்டார். இவர் டி.ஆர்.பி ராஜாவை வீழ்த்தி வெற்றிபெற்றார். அமமுக 11 தொகுதிகளில் போட்டியிட்டு இந்த ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது.
அந்த வகையில், அமமுக எம்எல்ஏ காமராஜ், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் ஒப்புதலோடு விஜய்க்கு ஆதரவு அளித்ததாக தகவல்கள் பரவின. விஜய்யும் அவரது ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியதாக கூறப்பட்டது.
அதை தொடர்ந்து, நேற்றிரவு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திடீரென சென்னை ஆளுநர் மாளிகையில் பொறுப்பு ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்தார். அப்போது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக ஆதரவு தெரிவித்து ஆளுநரிடம் கடிதத்தை வழங்கினார். அமமுக எம்எல்ஏ காமராஜ் கையெழுத்திட்ட அந்த கடிதத்தை ஆளுநரிடம் டிடிவி தினகரன் வழங்கினார்.
#WATCH | Tamil Nadu | AMMK Party General Secretary TTV Dhinakaran says, "A letter was issued in support of TVK by my MLA Kamaraj. We are all shocked that I got an appointment with the Governor and I showed the real letter that I got from our CM candidate Edappadi Palaniswami... I… https://t.co/pHTPmAOu8w pic.twitter.com/C8NPSXcBXG
— ANI (@ANI) May 8, 2026
தொடர்ந்து, ஆளுநரை சந்தித்துவிட்டு ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், தனது வழக்கறிஞரின் மூலம் அமமுக எம்எல்ஏ காமராஜ் நேற்று மாலை 6.30 மணிக்கு அதிமுகவுக்கான ஆதரவு கடிதத்தில் கையெழுத்திட்டு தனக்கு அனுப்பியதாக தெரிவித்தார். ஆனால், அவர் தவெகவுக்கு ஆதரவு அளித்து கடிதம் வழங்கியதாக செய்திகள் வெளியானதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் என்றார்.
மேலும், அமமுக எம்எல்ஏ காமராஜை காணவில்லை என்றும் அவர் தொலைபேசி தொடர்புகொண்டாலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் டிடிவி தினகரன் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, தவெக அவரிடம் குதிரை பேரம் நடத்தியிருக்கலாம் அல்லது அவர் விலை போயிருக்கலாம் என்றும் பேசியிருந்தார்.
ஆனால், அதன் பிறகு காமராஜ், சென்னை ஆளுநர் மாளிகைக்கு நேரில் வந்தார். டிடிவி தினகரன் உடன் சென்று காமராஜ், ஆளுநரை நேரில் சந்தித்தார். ஆளுநரை சந்தித்த பின்னர், ஆளுநர் மாளிகைக்கு வெளியே அளித்த பேட்டியில், புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் விடுதியிலேயே தானும் தங்கியிருந்ததாக கூறினார்.
"தவெகவுக்கு நான் எந்த ஆதரவு கடிதத்தையும் கொடுக்கவில்லை. ஆளுநர் மாளிகை செயலாளரிடம் இருந்து அழைப்பு வந்தது, அதனால் உடனே இங்கு வந்துவிட்டேன். டிடிவி தினகரன் அழைக்கும்போது என் கையில் போன் இல்லை. அதனால் அவர் போனை எடுக்க முடியவில்லை. என்னைப் போலவே போலியாக கையெழுத்துவிட்டு கடிதம் அளித்துள்ளனர்" என்றார்.
மேலும், காமராஜ் பெயரில் போலியாக கடிதம் ஆளுநர் மாளிகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது என டிடிவி தினகரனும் குற்றஞ்சாட்டினார். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள ஆளுநரிடம் கோரியாதகவும், உரிய விசாரணையை மேற்கொள்வதாக ஆளுநர் உறுதியளித்ததாகவும் டிடிவி தினகரன் தெரிவித்தார். இதுகுறித்து ஆளுநர் என்ன முடிவெடுப்பார்? என்பதும் பெரும் கேள்வியாக உள்ளது.
தவெக தலைவர் ஆளுநரிடம் போலி ஆதரவு கடிதத்தை அளித்திருக்கும்பட்சத்தில், BNS சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும். இந்த குற்றத்திற்கான தண்டனை விவரங்களை இங்கு காணலாம்.
போலி ஆவணம் தயாரித்தல் : ஆளுநரிடம் போலி கையெழுத்து இட்ட கடிதத்தை அளிப்பது மிகக் கடுமையான குற்றம். BNS பிரிவு 336 & 340-இன் கீழ், போலி ஆவணங்களை உருவாக்குதல் மற்றும் அதை உண்மையானது என நம்பவைத்து ஏமாற்றுதல். இதற்கு 7 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
ஏமாற்றுதல் மற்றும் மோசடி : BNS பிரிவு 318-இன் கீழ், ஒரு பொது அதிகாரியை (இங்கு ஆளுநர்) ஏமாற்றி, ஒரு பதவியைப் பெறுவது கிரிமினல் மோசடியாகும். 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
கூட்டுச் சதி : BNS பிரிவு 61-இன் இத்தகைய செயலில் பல நபர்கள் இணைந்து ஈடுபட்டால், அது சதித் திட்டத்தின் கீழ் வரும். இதற்கும் மிகக் கடுமையான தண்டனைகள் உண்டு என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏன் இதன் பெயர் குதிரை பேரம்?: பழங்காலத்தில், சந்தைகளில் குதிரைகளின் தரம் மற்றும் விலையை நிர்ணயிக்கும்போது வாங்குபவருக்கும் விற்பனை செய்பவருக்கும் இடையே கடுமையான பேரம் நடக்கும். அதைப் போலவே, அரசியலில் எம்எல்ஏ, எம்பிக்கள் குதிரையை போன்றவரகள். அவர்களுக்கு பணம் அல்லது பதவி ஆசை காட்டி பேரம் பேசுவதால் இதை குதிரை பேரம் (Horse Trading) என்கிறார்கள்.
எப்போது பேசுபொருளாகும்?: இது பெரும்பாலும் தேர்தல் நேரங்களிலும், ஒரு ஆட்சி கவிழும் தருவாயிலும் தான் நடக்கும். ஆட்சியில் இருக்கும்போது, சில எம்எல்ஏ, எம்பிக்கள் அதிருப்தியில் இருந்தால், அந்த ஆட்சியை தக்கவைக்கவோ அல்லது கவிழ்க்கவோ எதிர்க்கட்சிகள் முயற்சிக்கும் போது இந்த குதிரை பேரம் நடக்கும்.
கட்சித் தாவல் தடை சட்டம்: இந்தியாவில் இதை தடுக்க, கடந்த 1985ஆம் ஆண்டில் கட்சித் தாவல் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் இதில் உள்ள சில ஓட்டைகளை பயன்படுத்தியும் குதிரை பேரம் நடைபெறுகிறது. ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக பிரிந்து சென்றால் இது கட்சித் தாவலாக கருதப்படாது. இதுவும் குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும்.
ஒருவேளை, குதிரை பேர குற்றச்சாட்டுகள் உண்மையாகும்பட்சத்தில், தவெக ஆட்சியமைப்பதிலும், விஜய் முதல்வராவதிலும் சிக்கல் எழலாம். வேறு யாரும் ஆட்சியமைக்க முன்வராதபட்சத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சியும் அமலுக்கு வரும் வாய்ப்பும் உள்ளது.
ஆனால், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்வைத்த பகீரங்க குற்றச்சாட்டுக்கு தமிழக வெற்றிக் கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அமமுக எம்எல்ஏ காமராஜ் ஒரு காரின் முன் இருக்கையில் அமர்ந்து, தவெகவிற்கு ஆதரவளித்த கடிதத்தில் கையெழுத்திடுவது போன்ற வீடியோ தவெக தரப்பில் வெளியிடப்பட்டது.
காமராஜ் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பதாக தன் சுயநினைவுடன் மகிழ்ச்சியுடன் எழுதிய கடிதத்தின் வீடியோ காட்சிகள் தான் இது என்றும் டிடிவி தினகரன் ஒப்புதலுடன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பதாக அவர் கூறியிருந்தார் என்றும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
#WATCH | TVK shares a video of AMMK MLA Kamaraj, saying "These are the video visuals of AMMK MLA Kamaraj voluntarily and happily writing a letter expressing his support for the Tamilaga Vettri Kazhagam. He had stated that he was extending support to the Tamilaga Vettri Kazhagam… pic.twitter.com/sM3xtyXx12
— ANI (@ANI) May 8, 2026
ஆனால் அவர் கடிதத்தை எழுதவில்லை என்ற தகவல் பரவி வருவது உண்மைக்கு புறம்பானது என்றும் இவை அனைத்தையும் மறைத்து விட்டு டிடிவி தினகரன் தவறான செய்திகளை தகவல்களை தெரிவித்து வருகிறார் என்றும் தவெக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தவரை யாருடனும் பேரம் பேச வேண்டிய தேவையில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.