முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு தேவை என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., "இந்தியா முழுவதும் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களை  3 மாதங்களுக்கு பணியாற்றச் செய்யும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு இடங்களை 30% அதிகரிக்க இந்திய மருத்துவக்குழு முடிவு செய்துள்ளது. இது வரவேற்கத்தக்க திட்டம் தான் என்றாலும் கூட, ஊரகப் பகுதிகளில் மருத்துவ சேவையை பரவலாக்க, மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்குவது தான் சிறந்த தீர்வாகும்.


மருத்துவக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு பயிலும் மருத்துவர்கள் படிப்புக் காலத்தில் 3 மாதங்களுக்கு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவது கட்டாயமாக்கப்படவுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மாநில அரசுகள், முதுநிலை மருத்துவம் பயிலும் மாணவர்கள் மாவட்ட மருத்துவமனைகளுக்கு பணியாற்றச் செல்லும் போது, மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ சேவை பாதிக்கப்படும் என கவலை தெரிவித்தன. அதைத் தொடர்ந்து இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் நோக்கத்துடன், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இடங்களை 30% உயர்த்துவதற்கு மருத்துவக்குழு தீர்மானித்து உள்ளது. மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பது பயனுள்ளது என்பதால், இத்திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக வரவேற்கிறது.


அதே நேரத்தில், மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், ஊரகப் பகுதிகளிலும் தரமான மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்வதற்கு இது நிரந்தரமான தீர்வு அல்ல. இளநிலை மருத்துவம் மற்றும் முதுநிலை மருத்துவம் படித்த மருத்துவர்கள் கிராமப்பகுதிகளில் நிரந்தரமாக பணியாற்றுவதை உறுதி செய்வது தான் இச்சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு ஆகும். ஆனால், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வந்த அத்தகைய நிரந்தரத் தீர்வு முறையை ஒழித்து விட்டு, இம்முறையை புகுத்துவது நகைமுரண் ஆகும்.


தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளிலுள்ள மொத்த இடங்களில் 50% இடங்கள் கிராமப்புறங்கள், தொலைதூரப் பகுதிகள்மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்தது. அரசு மருத்துவமனைகளில் சேவையாற்றிய மருத்துவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், அவர்கள் தொடர்ந்து ஊரக அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற ஊக்குவிக்கும் வகையிலும் இந்த சலுகை அளிக்கப்பட்டு வந்தது. இதன்மூலம் எந்தவித கட்டாயமும் இன்றி எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., எம்.டி படித்த மருத்துவர்கள் ஊரகப் பகுதிகளில் சேவையாற்றி வந்தனர். அதனால், கிராமப்புற மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் எந்த தடையுமின்றி கிடைத்து வந்தன.


ஆனால், அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான மாணவர் சேர்க்கை முறை தேவை என்று கூறி, இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த உன்னதமான முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை முறையை இந்திய மருத்துவக் குழு கடந்த 2017-ஆம் ஆண்டு ரத்து செய்தது. அதன்பின்னர் ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர ஊக்க மதிப்பெண் வழங்கும் திட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட போதிலும், அதில் சில குளறுபடிகள் இருப்பதாகக் கூறி, அத்திட்டத்தை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்து  விட்டது. இதனால் ஊரகங்களில் பணியாற்ற விரும்பும் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.


மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், ஊரகப் பகுதிகளிலும் முதுநிலை மருத்துவர்களின் சேவையை அதிகரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நோக்கம் சிறப்பானதாகும். ஆனால், அந்த நோக்கத்தை எட்டுவதற்கு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ இடங்களை அதிகரிப்பது மட்டும் போதாது. மாறாக, ஊரகப் பகுதிகளில் முதுநிலை மருத்துவர்கள் தாங்களாகவே முன்வந்து பணியாற்றும் சூழலை உருவாக்குவது தான் தீர்வாக அமையும். முதுநிலை மருத்துவப் படிப்புகளில், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் தான் அத்தகைய சூழலை  ஏற்படுத்த முடியும். அதை செய்யவில்லை என்றால், அடுத்த சில ஆண்டுகளில் ஊரகப் பகுதிகளில் மட்டுமல்ல, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு கூட மருத்துவர்கள் முன்வர மாட்டார்கள்.


எனவே, கிராமப்புறங்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்பதில் மத்திய அரசுக்கு  உண்மையாகவே அக்கறை இருந்தால், முதுநிலை மருத்துவப் படிப்புகளில், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் செயல்படுத்த மாநில அரசுகளை ஊக்குவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அனைத்து நிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.