"ஏக்கருக்கு ரூ. 5,000 மானியம் வழங்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

தெலுங்கானா மாநிலத்தில் வழங்கப்படுவதை போல ஏக்கருக்கு ரூ. 5,000 ஊக்குவிப்பு மானியம் வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

Written by - R Balaji | Last Updated : May 21, 2025, 08:11 PM IST
  • ஏக்கருக்கு ரூ. 5000 மானியம் வழங்க வேண்டும்
  • அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
"ஏக்கருக்கு ரூ. 5,000 மானியம் வழங்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, குறுவைத் தொகுப்புத் திட்டத்தை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் ஏக்கருக்கு ரூ.5,000 மானியம் வேண்டும். காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக   மேட்டூர் அணையிலிருந்து வரும் ஜூன் 12-ஆம் தேதி காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவது உறுதியாகி விட்ட நிலையில்,  குறுவை சாகுபடி செய்ய  உழவர்களை ஊக்குவிப்பதற்கான  குறுவைத் தொகுப்புத் திட்டம் இன்று வரை அறிவிக்கப்படவில்லை. காவிரி பாசன மாவட்ட உழவர்களின் நலனில் தமிழக அரசு அக்கறையின்றி செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

மேட்டூர் அணையிலிருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விடப்படாத ஆண்டுகளில்,  நிலத்தடி நீரை பயன்படுத்தி உழவர்களை ஊக்குவிக்கு நோக்குடன் தான் குறுவைத் தொகுப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது என்றாலும் கூட,  பல்வேறு காரணங்களால் குறுவை பருவத்தில் உழவர்கள்  இழப்பை சந்திப்பது வாடிக்கையாகி விட்ட நிலையில், அதைக் கருத்தில் கொண்டு அனைத்து ஆண்டுகளும் குறுவைத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.  ஆனால், நடப்பாண்டிற்கான குறுவைத் தொகுப்பு இன்னும் அறிவிக்கப்படாதது உழவர்களிடையே பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.

குறுவை பாசனத்திற்காக இன்னும் 3 வாரங்களில் காவிரியில் தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே குறுவைப் பாசனத்திற்கு  காவிரி பாசன மாவட்ட உழவர்கள் தயாராக வேண்டும்.  விதை விதைப்பது,  நாற்றாங்கால்களைத் தயார் படுத்துவது போன்ற பணிகளை உழவர்கள்  மேற்கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான  விதை, உரங்கள், நுண்ணூட்டச் சத்துகள் போன்றவற்றை மானிய விலையில் வழங்குவது தான்  குறுவைத் தொகுப்பு திட்டமாகும்.  அதை தாமதப்படுத்துவது  எந்த வகையிலும் நியாயமல்ல.

கடந்த ஆண்டில் வேளாண் துறை மிக மோசமான பின்னடைவை சந்தித்திருக்கிறது. 2024-25ஆம் ஆண்டில்  ஒட்டுமொத்த வேளாண் துறையும் மைனஸ் 0.09% வளர்ச்சியடைந்துள்ளது.  உழவுத் தொழிலின் வளர்ச்சியை மட்டும் பார்த்தால்  மைனஸ் 5.93 விழுக்காடாக வீழ்ச்சியடைந்துள்ளது. இத்தகைய சூழலில் நடப்பாண்டிலாவது வேளாண் துறை வளர்ச்சியை நேர்மறையாக மாற்ற சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். அதற்கு மாறாக வழக்கமான திட்டங்களையே தாமதப்படுத்தக்கூடாது.

எனவே, இனியும் தாமதிக்காமல்,காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு விதைகள், உரங்கள், நுண்ணூட்ட சத்துகள் உள்ளிட்டவற்றை மானியத்தில் வழங்கும் குறுவைத் தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். கடந்த ஆண்டைப் போல ஒரு லட்சம் ஏக்கருக்கு மட்டும் தான் குறுவைத் தொகுப்பு உதவிகள் வழங்கப்படும் என்று இலக்கு நிர்ணயிக்காமல், அனைத்து உழவர்களுக்கும்  வழங்க வேண்டும். அத்துடன், குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தெலுங்கானா மாநிலத்தில் வழங்கப்படுவதைப் போன்று  ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் ஊக்குவிப்பு மானியமும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். 

மேலும் படிங்க: "ஈபிஎஸ் பொய் கூறி வருகிறார்".. உளறிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!

மேலும் படிங்க: தமிழகத்தின் இந்த 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News