)
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆலமரத்துப்பட்டியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்களை வீடு தேடிச் சென்றடையச் செய்யும் வகையில், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றார். அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும், பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமை தொடங்கி வைத்துள்ளார்கள் என அமைச்சர் பெரியசாமி கூறினார்.
ஒப்புகைச்சீட்டு பெற வேண்டும்
தொடர்ந்து பேசிய அவர், கோரிக்கை மனுக்கள் அளிப்பதற்காக பொதுமக்கள் யாரையும் தேடிச் சென்று அலைய வேண்டியது இல்லை. உங்கள் கிராமங்களில் நடத்தப்படும் முகாம்களில் மனுக்கள் அளிக்க வேண்டும். இத்திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே நேரில் வந்து மனுக்களை பெறுவதாக கருதும் அளவிற்கு இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள்அளித்து, ஒப்புகைச் சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.
அரசின் திட்டங்கள் அனைத்தும் ஏழை, எளிய மக்களுக்கு வீடு தேடிச் சென்றடைய வேண்டும் என்பதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, கணவனை இழந்தவர்கள், உதவித்தொகை பெறாதவர்கள், சாலை வசதி, தெரு விளக்கு வசதி, குளத்தை தூர்வாரும் பணிகள், வாய்க்கால் உருவாக்குதல் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் சமயத்தில் சொன்னபடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 1.16 கோடி மகளிர் மாதம் ரூ.1000 பெற்று பயனடைந்து வருகின்றனர். தற்போது நடைபெறும் முகாம்களில் பெறப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் விடுபட்டு போன தகுதியான அனைவருக்கும் வீடு தேடி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். மேலும். இம்முகாமில் மனு அளிக்கும் 60 வயதினை தாண்டியவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
கலைஞர் கனவு இல்லம் விண்ணப்பம்
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 10,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழுதடைந்த வீடுகளை சீரமைக்கும் திட்டத்தில் 2 இலட்சம் வீடுகளை சீரமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் ஒரு இலட்சம் வீடுகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள இயலாத அளவிற்கு பழுதடைந்துபோன வீடுகளுக்கு பதிலாக புதிதாக வீடுகள் கட்டுவதற்காக 25,000 பயனாளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வேலைவாய்ப்புகள் வழங்குவதில் வெளிப்படைத்தன்மையுடன் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இது மக்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கருத்தை வலுப்படுத்தும் விதமாக அவருக்கு என்றென்றும் ஆதரவு அளிக்க வேண்டும்" ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி கேட்டுக்கொண்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ