Chennai Anna Salai Steel Bridge: சென்னையில் இந்த பொங்கல் நேரத்தில் அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் குஷியான மனநிலையில் வாகனத்தை ஓட்டுகிறார்கள். இது தொடர் விடுமுறை காலங்களில் சென்னை மக்களுக்கு பழக்கப்பட்டதுதான்.
ஆனால், இதுவே சாதாரண நாட்களில் அதுவும் குறிப்பாக அலுவல் நேரங்களில் நீங்கள் சென்னையில் நிம்மதியாக வாகனத்தை ஓட்டுவது குறித்து யோசித்து கூட பார்க்க முடியாது. மெட்ரோ பணிகள், மேம்பால பணிகள், சாலை பணிகள் என பல இடர்பாடுகள் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும். அதுவும் முக்கிய சாலைகளான ஜிஎஸ்டி சாலை, ஈசிஆர், ஓஎம்ஆர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்தை நெரிசலை காண முடியும்.
Anna Salai Steel Bridge: அண்ணா சாலையின் அற்புத பாலம்
அந்த வகையில், நகரின் பிரதான சாலையாக இருக்கும் அண்ணா சாலையையும் இதுபோன்ற நேரங்களில் கடப்பது என்பது ஒரு பெரும் போர்க்களத்தைச் சந்திப்பதற்குச் சமம் எனலாம். நிச்சயம் அந்த வலி சென்னைவாசிகளுக்கு நன்றாக தெரியும். தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் இருந்து சைதாப்பேட்டை மெட்ரோ வரை செல்வதற்குள், உங்களுக்கு நிச்சயம் குறைந்தது முப்பது முதல் நாற்பது நிமிடங்களாவது ஆகிவிடும். அதுவும் இடையில் எக்கச்சக்க சிக்னல்கள். தற்போது பல சாலைகள் ஒற்றை வழித்தடமாகிவிட்டதால் இன்னும் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலையே உள்ளது. ஆனால், இனி அந்தக் கவலை சென்னை மக்களுக்குத் தேவையில்லை என கூறலாம். சென்னையின் போக்குவரத்து வரலாற்றிலேயே ஒரு பெரிய மாற்றத்தினை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை நிகழ்த்திக் காட்டியுள்ளது என்றே சொல்லலாம.
Anna Salai Steel Bridge: சென்னை மக்களுக்கு பெரிய நிம்மதி
தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வந்த சூழலில், சென்னை மக்களின் நீண்ட நாள் கனவாக அது இருந்து வருகிறது. இந்நிலையில், அந்த உயர்மட்ட மேம்பாலம் தற்போது பயன்பாட்டிற்கு தயாராகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நிச்சயம் சென்னைவாசிகளுக்கும், தினந்தோறும் அண்ணாசாலையில் பயணிப்பவர்களுக்கும் பெரிய நிம்மதி பெருமூச்சை அளிக்கும்.
Anna Salai Steel Bridge: எஃகு பாலம்
தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான இந்த உயர்மட்ட மேம்பாலம், சாதாரணமான பாலம் அல்ல. 3.2 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைந்திருக்கும் ஒரு பிரம்மாண்டமான மற்றும் தனித்துவமான பாலம் என்றே இதனைச் சொல்லலாம். சுமார் 485 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம், நவீன பொறியியல் தொழில்நுட்பத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
வழக்கமாகப் பாலங்கள் கட்டப் பயன்படுத்தப்படும் சிமெண்ட் மற்றும் கற்காரை (Concrete) முறையைப் போலன்றி, இது நவீன 'எஃகு கலவைக் கட்டுமானம்' (Steel Composite Structure) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, வலிமையான இரும்புத் தூண்கள் மற்றும் கர்டர்களைக் கொண்டு, மிகக் குறுகிய காலத்தில், மிக உறுதியாக இதனைக் கட்டி முடித்துள்ளனர்.
Anna Salai Steel Bridge: சாலையில் பறக்கலாம்
தேனாம்பேட்டை, நந்தனம், சி.ஐ.டி நகர் வழியாகச் சைதாப்பேட்டை வரை செல்ல வேண்டுமென்றால், பல போக்குவரத்துச் சிக்னல்களை கடந்து செல்ல வேண்டும், இதற்கு நாற்பது நிமிடங்கள் வரை ஆகும். ஆனால், இந்தப் புதிய பாலத்தில் பயணித்தால் வெறும் 5 முதல் 7 நிமிடங்களில் கடந்துவிடலாம். கண் இமைக்கும் நேரத்தில், எவ்வித தடையோ, நிறுத்தமோ இன்றி இறக்கைக்கட்டி பறக்கலாம்.
Anna Salai Steel Bridge: எப்போது திறப்பு?
இதனால், பள்ளி கல்லூரிக்கு செல்பவர்கள், அலுவலகம் செல்பவர்களுக்கு நேரம் மிச்சமாவதோடு, வாகனங்களின் எரிபொருளும் பெருமளவில் சேமிக்கப்படும். இது சுற்றுச்சூழலுக்கு சாதகமாக இருக்கும். முக்கியமாக, ஆம்புலன்ஸ் போன்ற அவரச ஊர்திகள் இனி எவ்வித நெரிசலில் சிக்காமல் விரைவாக மருத்துவமனையைச் சென்றடைய இது உதவிகரமாக இருக்கும். இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் இந்த பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Anna Salai Steel Bridge: பாலத்தின் ஆயுட்காலம் மிக அதிகம்
அதிகாரிகள் தெரிவிக்கும் தகவலின்படி, இது முழுவதும் இரும்பால் (எஃகு) ஆனது என்பதால், சாதாரண கற்காரைப் பாலங்களை விட இதற்கு ஆயுட்காலம் மிக அதிகம் என கூறப்படுகிறது. அதேசமயம், இதற்கான பராமரிப்புச் செலவும் மிகவும் குறைவு என்கிறார்கள். எதிர்காலத்தில் சென்னையின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக இந்தப் பாலம் நிச்சயம் உருவெடுக்கும் என்றும் கருதப்படுகிறது. அண்ணா சாலையின் கீழே மெட்ரோ சுரங்கப்பாதையில் இயக்கப்படும் நிலையில், அதற்கு மேல் இந்த இரும்பு பாலம் நவீன பொறியியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சென்னை மக்களே... குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ரெடி - சிறப்பம்சங்கள் என்னென்ன?
மேலும் படிக்க | டிரைவர் இல்லா ரயில்... தீயாய் நடக்கும் பணி! டிராபிக் கவலைக்கு முற்றுப்புள்ளி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









