)
Tamil Nadu Government Employees News: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அடிப்படை விதிகளிலேயே தமிழ்நாடு அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்படுவதை தவிர்க்க, விதிகளை திருத்தி அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இதுகுறித்து அறிவித்ததன் அடிப்படையில், அதற்கான அரசாணை இன்று (ஆகஸ்ட் 30) வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் மனிதவள மேலாண்மைத் துறையின் செயலாளர் சி. சத்யமூர்த்தி வெளியிட்ட அரசாணையின்படி, விதியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறிப்பாக ஓய்வு பெறும் நேரத்தில், இடைநீக்க உத்தரவுகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் ஒரே மாதிரியாகக் கையாளப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முன்னர், அரசு ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டாலோ, இல்லையெனில் கடுமையான தவறான நடத்தை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டாலோ அடிப்படை விதிகளின் 56 (1)(c) பிரிவு அவர்களை ஓய்வுபெற அனுமதிக்காது. அந்த விதியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது திருத்தப்பட்ட விதிகளின் கீழ், இனி இடைநீக்க செய்யபோட்டாலும், குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டாலும் கூட ஊழியர்கள் அவர்களின் ஓய்வு பெறும் தேதியில் ஓய்வு பெற்றதாகக் கருதப்படுவார்கள். இருப்பினும், தற்போது உள்ள தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கைகள் அல்லது நீதித்துறை நடவடிக்கைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2003ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி அன்று அல்லது அதற்குப் பிறகு நியமிக்கப்பட்ட ஊழியர்கள், அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் தவறான நடத்தை அல்லது அலட்சியத்திற்காகக் குற்றஞ்சாட்டப்பட்டால், அவர்களின் ஓய்வூதியக் கணக்கில் அரசு பங்களிப்புகளை நிறுத்தி வைக்க அதிகாரம் உள்ளது. இதுபோன்ற சமயங்களில் இறுதி உத்தரவுகள் தமிழ்நாடு பொது சேவை ஆணையத்துடன் கலந்தாலோசித்த பின்னரே பிறப்பிக்கப்படும் என்பது நினைவுக்கூரத்தக்கது.
அடிப்படை விதிகளின் விதி 53, விதி 86 மற்றும் தமிழ்நாடு விடுப்பு விதிகள், விதி 7 ஆகியவற்றை அரசு திருத்தி உள்ளது. அரசு ஊழியர்கள் இடைநீக்கத்தின் போது ஈட்டிய விடுப்பு, பிற விடுப்பை பணமாக்குவதற்கான விதிகளும் திருத்தப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் முடிந்த பின்னரே ஊழியர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ