)
தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு பெரும் நற்செய்தியாக, கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் தங்க நகைக்கடன் ஒரு கிராமிற்கு ரூ. 6,000-லிருந்து ரூ. 7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சமீப நாட்களாக தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு அவசர பண தேவைக்காக நகைகளை அடகு வைப்பவர்களுக்கு ஒரு பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் மாநில தலைமை கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் என பல்லாயிரக்கணக்கான கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவசர பண தேவை ஏற்படும்போது, அதிக ஆவணங்கள் மற்றும் சிக்கலான நடைமுறைகள் இன்றி, மிக எளிதாக கடன் பெற முடிவதால், பெரும்பாலான மக்கள் தங்க நகைக்கடனுக்காக கூட்டுறவு வங்கிகளையே நாடுகின்றனர்.

கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் மட்டும், கூட்டுறவு வங்கிகளில் சுமார் 25 லட்சம் பேர், ரூ.25,000 கோடி வரை நகைக்கடன் பெற்றுள்ளனர் என்பதே இதன் தேவைக்கு சான்றாகும். மேலும், தேர்தல் சமயங்களில் கூட்டுறவு வங்கிகளில் பெறப்படும் விவசாய கடன்கள் மற்றும் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வாய்ப்புள்ளது என்பதும், மக்கள் இங்கு அதிக அளவில் கடன் வாங்க ஒரு முக்கிய காரணமாகும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்திய சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம், சுமார் ரூ.11,450-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூழலில், தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், தங்கத்தின் சந்தை மதிப்புக்கு ஏற்ப ஒரு கிராமுக்கு ரூ.8,000 வரை கடன் வழங்குகின்றன. ஆனால், கூட்டுறவு வங்கிகளில், ஒரு கிராமுக்கு ரூ.6,000 மட்டுமே கடன் வழங்கப்பட்டு வந்தது. இதனால், அதிக தொகையை எதிர்பார்த்து செல்லும் மக்கள் ஏமாற்றத்துடன் தனியார் வங்கிகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது, கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளர் எண்ணிக்கையைப் பாதித்தது. இந்த சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், சமீபத்தில் கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் கூடி ஆலோசித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், தங்கத்தின் தற்போதைய சந்தை விலையை கருத்தில் கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன் தொகையை, ஒரு கிராமுக்கு ரூ.7,000 ஆக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
உயர் அதிகாரிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவை தொடர்ந்து, இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விரைவில் பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த உத்தரவு வெளியானதும், வரும் நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களிலும், ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.7,000 கடன் வழங்கும் புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்று கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை, தனியார் வங்கிகளுக்கு நிகராக கூட்டுறவு வங்கிகளும் கடன் வழங்க வழிவகுக்கும். இதனால், அவசர பணத் தேவைக்காக நகைகளை அடகு வைக்கும் மக்கள், அதிக கடன் தொகையை பெறுவதுடன் பாதுகாப்பான, நம்பகமான கூட்டுறவு வங்கிகளின் சேவையை முழுமையாக பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும், எதிர்காலத்தில் வெள்ளியையும் அடமானமாக வைத்து, அதன் மதிப்பிற்கு கடன் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்தும், அரசு தீவிரமாக ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ