)
தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், அவர்களை தொழில் முனைவோராக ஊக்குவிக்கவும், தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் "ஆவின் பாலகம் மானிய திட்டம்" சுயதொழில் தொடங்க விரும்பும் பலருக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது. இந்த திட்டம் எப்படி செயல்படுகிறது? இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்? மானியம் பெற தேவையான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த, சுயதொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோருக்கு, ஆவின் பாலகம் அமைப்பதற்காக அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், குறிப்பிட்ட சமூகத்தினரின் வறுமை நிலையை குறைத்து, அவர்களுக்கு ஒரு நிலையான வருமானத்திற்கான வழியை ஏற்படுத்துவதே ஆகும். இந்த திட்டத்தின் கீழ், ஆவின் பாலகம் அமைப்பதற்கான மொத்த திட்ட மதிப்பீடான ரூ.3 லட்சத்தில், 30% அதாவது ரூ. 90,000 மானியமாக அரசு சார்பில் வழங்கப்படும். இந்த மானிய தொகையை பயன்படுத்தி, பாலகத்திற்கு தேவையான மின் வாகனம், Freezer, Cooler போன்ற அத்தியாவசிய மின் உபகரணங்களை வாங்கிக்கொள்ளலாம்.
இந்த மானியத்தை பெற, விண்ணப்பதாரர் சில முக்கிய தகுதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பதாரர், ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். வயது 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ, இதற்கு முன்பு தாட்கோவின் கீழ் எந்தவிதமான மானியத்தையும் பெற்றிருக்க கூடாது.
மானியம் பெறுபவர்கள், ஆவின் பாலகம் அமைப்பதற்கு சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதன்படி, தேர்ந்தெடுக்கப்படும் கடையின் இடம், குறைந்தபட்சம் 100 சதுர அடியாக இருக்க வேண்டும். அந்த இடம் விண்ணப்பதாரருக்கு சொந்தமானதாகவோ, குத்தகைக்கு எடுத்ததாகவோ அல்லது வாடகை கட்டிடமாகவோ இருக்கலாம். அதற்கான உரிய ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். தொழில் தொடங்குவதற்கு முன்பு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடமிருந்து உணவு உரிமம் பெற்றிருக்க வேண்டும். கடையின் அடையாள பலகை மற்றும் உட்புற வடிவமைப்பு போன்றவற்றை விண்ணப்பதாரரே தனது சொந்த செலவில் செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பதாரர், ஆவின் நிறுவனத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
இந்த திட்டத்தில் மானியம் பெற விரும்பும் தகுதியுள்ள தொழில் முனைவோர்கள், இரண்டு வழிகளில் விண்ணப்பிக்கலாம். உரிய ஆவணங்களுடன், உங்கள் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். அப்படி இல்லை என்றால் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tahdco.com/ என்ற தளத்தில் ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்யலாம். இந்த திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தினரின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சிறந்த ஊன்றுகோலாக இருக்கும். தகுதியுள்ள நபர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் தொழில் கனவை நனவாக்கிக்கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ