)
இந்தியா முழுவதும் பெண்களுக்கு சிறப்பு திட்டங்கள் பல உள்ளன. அதுவும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகையுடன் கூடிய பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் முதன்மையான ஒன்று ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கான இந்திரா காந்தி முதுநிலை படிப்பு உதவி தொகை திட்டமாகும் (Post Graduate Indira Gandhi Scholarship for Single Girl Child). இந்த திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மாணவிகளுக்கு முதுகலை பட்டம் படிக்க மத்திய அரசு உதவித்தொகை வழங்குகிறது. இதன் மூலம் பெண்கள் எந்தெந்த தடையும் இன்றி தங்களது முதுகலை படிப்பை தொடர முடியும். இடைநிற்றலை தவிர்க்கவும், பெண்கள் யார் உதவியும் இன்றி படிக்கவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.
யார் யார் விண்ணப்பிக்கலாம்?
ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே இருந்து அவர்கள் முதுகலை பட்டப்படிப்பு படித்தால் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தையின் இருந்தால் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெற முடியும், மாறாக அண்ணன் அல்லது தம்பி இருந்தால் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது. மேலும் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ஒரு குழந்தைக்கு மட்டும் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். கடந்த 2005 ஆம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பை படிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த மத்திய அரசு இந்த இந்திரா காந்தி முதுகலை படிப்பு உதவித்தொகை திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தில் பயன்பெறும் மாணவிகளுக்கு வருடத்திற்கு ரூபாய் 36 ஆயிரத்து 200 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த தொகையானது நேரடியாக மாணவிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் இந்த இந்திரா காந்தி திட்டத்தின் கீழ் 3000 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இந்திரா காந்தி முதுகலை படிப்பு உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் 30 வயதிற்கு மேல் இருக்கக் கூடாது. அதே போல தொலைதூர கல்வியோ அல்லது திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் மூலமோ முதுகலை படிப்பில் சேர்ந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். நேரடியாக கல்லூரிகளுக்கு சென்று படிக்கும் மாணவிகளுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்கு உதவித்தொகை அவர்களுக்கு வழங்கப்படும். கல்லூரியில் சேர்ந்த மமுதலாம் ஆண்டே திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும், இரண்டாம் ஆண்டில் விண்ணப்பித்தால் உதவித்தொகை கிடைக்காது.
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் படித்தால் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். அதே சமயம் இந்த திட்டத்தில் உதவி தொகை மட்டுமே வழங்கப்படும், இது தவிர விடுதி கட்டணமோ அல்லது வேறு எந்த கட்டணமோ வழங்கப்படாது என்பதை நினைவில் வைக்க வேண்டும். தகுதியான மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், இளங்கலை பட்டப்படிப்பு முடித்ததற்கான சான்றிதழ், முதுகலை கல்வி கட்டண ரசீது, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வங்கி பாஸ்புக், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். யுஜிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ அல்லது இ சேவை மையத்திலோ இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ