Chennai Egmore: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மொத்தம் 9 ரயில்களின் புறப்படும்/வந்து சேரும் இடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Chennai Egmore Temporary Train Terminal Changes: சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையம் சுமார் 114 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். சென்னையில் இருந்து விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை மார்க்கமாக தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் அனைத்தும் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்தே புறப்படும், தென்மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்களும் எழும்பூர் வரை செல்லும்.
முக்கியமாக நெல்லை எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முக்கிய ரயில்கள் தினமும் இங்குதான் வந்து செல்கின்றன. இவை மட்டுமின்றி, புறநகர் ரயில்கள், வட மாநிலங்களுக்கான சில ரயில்களும் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகின்றன. இதனால், தினமும் லட்சக்கணக்கானோர் எழும்பூர் ரயில் நிலையத்தை பயன்படுத்துகிறார்கள் எனலாம்.
இந்த சூழலில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தற்போது மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு முதல் இந்த பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எழும்பூர் ரயில் நிலையம் விமான நிலையத்திற்கு இணையான வசதிகளை பெற இருக்கிறது என கூறப்படுகிறது.
பல அடுக்குகள் கொண்ட கார் மற்றும் பைக் பார்க்கிங் வசதி, உணவகங்களுக்கு பிரத்யேக இடம், அனைத்து நடைமேடைகளையும் எளிதில் அணுகுவதற்கு ஏற்ற வசதிகள் ஆகியவை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எழும்பூர் ரயில் நிலையத்தில் 32 நகரும் படிக்கட்டுகள், 47 லிஃப்ட் வசதிகளும் ஏற்படுத்தப்பட இருக்கிறது.
இந்நிலையில், எழும்பூர் ரயில் நிலையத்தில் தற்போது மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக இனி தற்காலிகமாக சில ரயில்கள் எழும்பூரில் இருந்து புறப்படாமல், தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்றும் சில ரயில்கள் எழும்பூர் வரை வராமல், தாம்பரத்திலேயே நிறுத்தப்படும் என்றும் தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவித்துள்ளது. மேலும் மும்பை செல்லும் ஒரு ரயில் மட்டும் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 9 ரயில்களின் புறப்படும்/வந்து சேரும் இடம் மாற்றப்பட்டுள்ளது. அவை எந்தெந்த ரயில்கள் என்பதை இங்கு காணலாம்.
சென்னை எழும்பூர் - திருச்சி செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 12653) வரும் செப். 11ஆம் தேதி முதல் நவ. 10ஆம் தேதி வரை, சென்னை எழும்பூருக்கு பதிலாக நள்ளிரவு 12:03 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
திருச்சி - சென்னை எழும்பூர் செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 12654) வரும் செப். 10ஆம் தேதி முதல் நவ. 9ஆம் தேதி வரை, சென்னை எழுபம்பூருக்கு பதிலாக நள்ளிரவு 3:30 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும்.
மதுரை - சென்னை எழும்பூர் செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 12638), வரும் செப். 10ஆம் தேதி முதல் நவ. 9ஆம் தேதி வரை, சென்னை எழும்பூருக்கு பதிலாக அதிகாலை 04:45 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும்.
அதே நேரத்தில், சென்னை எழும்பூர் - மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 12637) வழக்கம் போல் சென்னை எழும்பூரில் இருந்தே புறப்படும், அதில் ஏதும் மாற்றம் இல்லை.
சென்னை எழும்பூர் - திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 22675), வரும் செப். 11ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை, சென்னை எழும்பருக்கு பதிலாக காலை 08:12 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
அதேநேரத்தில், திருச்சி - சென்னை எழும்பூர் செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 22676) வழக்கம்போல் சென்னை எழும்பூர் வந்தடையும், அதில் மாற்றம் ஏதும் இல்லை.
சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 22661), வரும் செப். 11ஆம் தேதி முதல் நவ. 10ஆம் தேதி வரை, சென்னை எழும்பூருக்கு பதிலாக மாலை 6:20 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் செல்லும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 22662), வரும் செப். 10ஆம் தேதி முதல் நவ. 9ஆம் தேதி வரை, சென்னை எழும்பூருக்கு பதிலாக காலை 06:35 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும்
சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண்: 16751), வரும் செப். 11ஆம் தேதி முதல் நவ. 10ஆம் தேதி வரை, சென்னை எழும்பூருக்கு பதிலாக மாலை 7:42 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண்: 16752), செப். 10ஆம் தேதி முதல் நவ. 9ஆம் தேதி வரை, சென்னை எழும்பூருக்கு பதிலாக காலை 06:45 மணிக்கு தாம்பரத்திற்கு வந்து சேரும்.
சென்னை எழும்பூர் - மும்பை CSMT செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண்: 22158), வரும் செப். 11ஆம் தேதி முதல் நவ. 10ஆம் தேதி வரை, சென்னை எழும்பூருக்கு பதிலாக காலை 06:45 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.
அதேநேரத்தில், மும்பை CSMT - சென்னை எழும்பூர் செல்லும் (ரயில் எண்: 22157) வழக்கம்போல் சென்னை எழும்பூருக்கே வந்தடையும், அதில் மாற்றம் இருக்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ