கொங்குநாடு கலைக்குழு சார்பில் 16 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற வள்ளிகும்மி நடன நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. இதில் பங்கேற்ற 16 ஆயிரம் பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பாராட்டு விழா கோவை பீளமேடு கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரது முன்னிலையில், 10 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற வள்ளிகும்மி நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடந்தது. முன்னதாக, பெருந்துறை வள்ளிகும்மி நிகழ்ச்சி மூலம் கின்னஸ் சாதனை படைத்த பெண்கள் மற்றும் கலைக்குழு ஆசிரியர்கள் ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினார்.
மேலும் படிக்க | 'ராம நவமியில் ராமர் பாலத்தை தரிசித்தேன்...' பிரமதர் மோடியின் தெய்வீக பதிவு...!
பின்னர், கின்னஸ் சாதனையின் ஒரிஜினல் சான்றிதழை, கொங்குநாடு கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் கே.கே.சி.பாலசுப்பிரமணியத்திடம் வழங்கினார். இதன் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், பெண்கள் என்றாலே சாதனை தான். சாதனை என்றாலே பெண்கள் தான். இந்த ஆட்சி மகளிருக்கான ஆட்சி. 16,000 பெண்கள் பங்கேற்ற வள்ளிகும்மி நிகழ்ச்சி, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது, நமக்கெல்லாம் பெருமை. சட்டமன்றமாக இருந்தாலும் சரி, மக்கள் மன்றமாக இருந்தாலும் சரி, கொங்குநாட்டு மக்களுக்காக போராடி பல திட்டங்களை பெறுகிறவர் ஈஸ்வரன். அவரது பேச்சில் மேற்கு மண்டல மக்களுக்கு தேவையான நன்மைகள், எதிர்பார்ப்புகள் இடம்பெற்றிருக்கும். கடந்த 2021ம் ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்றபோது, வாக்களித்த மக்கள் மகிழ்ச்சி அடைகிற வகையிலும், வாக்களிக்காத மக்கள், அய்யோ வாக்களிக்காமல் விட்டு விட்டோமே என அவர்களுக்கு அவர்களாகவே வருத்தம் அடைகிற வகையிலும், அனைவருக்குமான அரசாக இந்த ஆட்சி இருக்கும் என்று கூறினேன். அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
மேற்கு மண்டல மக்களுக்கு ஏராளமான திட்டங்களை வழங்கி வருகிறோம். மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம். அதனால் தான் 2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம்-புதுவையில் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். இது நமது ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ். வருகிற 2026ம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் நாம்தான் வெற்றிபெற போகிறோம். நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பில் தமிழகம் பாதிக்கப்படாது, தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்ற உத்தரவாதத்தை பிரதமர் மோடி, தமிழக மண்ணில் அறிவிக்க வேண்டும் என நான் கோரிக்கை வைத்தேன்.
ஆனால், ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடி, அதுபற்றிய அறிவிப்பு எதுவும் வெளியிடாமல், தமிழக மக்களை புறக்கணிக்கும் வகையில் பேசியுள்ளார். அதனால், வருகிற 2026 சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, எந்த தேர்தலாக இருந்தாலும் சரி பா.ஜ.கவை தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பார்கள். தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை நாம் பிரதமருக்கு நிரூபித்து காட்ட வேண்டும் என பேசினார். இந்த விழாவில், தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், செந்தில் பாலாஜி, கயல்விழி செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேசுகையில், கொங்குநாடு வளர்ச்சிக்கு அன்றே விதை போட்டவர் கலைஞர் கருணாநிதி. கடந்த 2021ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றபோது நமது முதல்வர் என்ன சொன்னாரோ அதை செய்து காட்டி வருகிறார். கொங்கு மண்டலத்துக்கு ஏராளமான திட்டங்களை தந்து கொண்டிருக்கிறார். அதை எல்லாம் சொன்னால் நேரம் போதாது. குறிப்பாக, அவினாசி-அத்திக்கடவு திட்டம், அவரது முயற்சியால்தான் இன்று செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்ற, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தவர் நமது முதல்வர்தான். அவரது கடுமையான உழைப்பால், சீரிய திட்டங்களால் இன்று தமிழ்நாடு, அகில இந்திய அளவில் 9.69 சதவீதம் வளர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது. கொங்கு மக்கள் கேட்டதை எல்லாம் வாரி வழங்கும் நமது முதல்வருக்கு நாம் துணை நிற்போம் என்றார்.
மேலும் படிக்க | 'கையெழுத்தை தமிழில் போடுங்கள்...' தமிழக தலைவர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









