தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டிலேயே முதன்முறையாக பள்ளிக் கல்வித் துறைக்கு என தனியாக தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். இதையடுத்து படப்பிடிப்பு கருவிகள் கொள்முதல் செய்தல், நிகழ்ச்சிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தன. கல்வித் தொலைக்காட்சிக்கான படப்பிடிப்புதளம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டாவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.


கல்வித் தொலைக்காட்சிக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து கடந்த சில வாரங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது. இந்தநிலையில், கல்வித் தொலைக்காட்சியின் ஒளிபரப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ- மாணவிகளின் திறமையை வெளிப்படுத்தச் செய்யும் நிகழ்ச்சிகளுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. யோகா, உடற்பயிற்சி, பள்ளிகளின் செயல்பாடு, ஆங்கிலப் பயிற்சி, கணிதப் பயிற்சி ஆகியவற்றுடன், நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கான ஆலோசனை, இணையதளம் குறித்த தகவல்கள் ஆகியவை இந்த சேனலில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் இடம்பெற்றுள்ளது.


கல்வித் தொலைக்காட்சியில், மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவர்கள், ஆசிரியர்களுக்காக இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மறு ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.