)
தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தவும், மாணவர்களின் ஆராய்ச்சி திறனை வளர்த்து, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் ஒரு சிறப்பு வாய்ந்த திட்டம் தான் "முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம்". கடந்த 2022 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 8 ஆம் தேதி, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் பொருளாதார சூழ்நிலைகள், மாணவர்களின் ஆராய்ச்சி ஆர்வத்திற்கு ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதே இதன் முக்கிய நோக்கம். தமிழ்நாட்டு மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்துதல், புதிய கண்டுபிடிப்புகளை மாநிலத்திலேயே ஊக்குவித்தல் மற்றும் திறன்வாய்ந்த இளைஞர்களை உருவாக்கி அவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்.
முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தகுதி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, அவர்கள் முனைவர் பட்டப் (Ph.D.) படிப்பை முடிக்கும் வரை, மாதந்தோறும் ரூ.25,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். அரசு பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், கலை, சமூக அறிவியல், மானுடவியல், பொறியியல், வேளாண்மை, சட்டம், மருத்துவம், கால்நடை அறிவியல் மற்றும் கடல்சார்வியல் போன்ற பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி செய்ய இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மாதாந்திர ஊக்கத்தொகையுடன், ஆய்வு கருவிகள் மற்றும் இதர செலவுகளுக்காக கூடுதல் தொகையும் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் மொத்தம் 180 மாணவர்கள் இந்த திட்டத்திற்காகதேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
ஆதார் அட்டை, பான் கார்டு/வாக்காளர் அட்டை, இளங்கலை மற்றும் முதுகலை பட்டச் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள், ஜாதிச் சான்றிதழ், வங்கி கணக்கு விவரங்கள், மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை விண்ணப்பிக்க தேவை. இந்த ஊக்கத்தொகைக்கான தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TRB) மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது. முதல் நிலையில், பொது அறிவு, திறனாய்வு, மற்றும் தர்க்கரீதியான பகுத்தறிவு ஆகியவற்றை சோதிக்கும் முதல் நிலை தேர்வு, இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடத்தப்படும்.
இரண்டாம் நிலை தேர்வு, முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சென்னையில் எழுத்து தேர்வு நடைபெறும். இதில் தமிழக அரசின் திட்டங்கள், கொள்கைகள், மற்றும் தமிழ் மரபு, கலாச்சாரம் சார்ந்த பகுப்பாய்வுக் கேள்விகள் இடம்பெறும். மூன்றாம் நிலையில், எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில், விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். சென்னையில் நடைபெறும் இந்த நேர்காணலில், அவர்களின் தமிழ் மொழி அறிவு, அறிவுசார் பண்புகள், மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் ஆகியவை சோதிக்கப்படும். இறுதியாக, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஊக்கத்தொகைக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்தத் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஒவ்வொரு ஆண்டின் இரண்டாம் பாதியிலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும். அப்போது, https://trb.tn.gov.in/ அல்லது https://bim.edu/index/tncmfp/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த திட்டம், தமிழ்நாட்டு இளைஞர்களின் ஆராய்ச்சிக் கனவுகளுக்கு சிறகுகள் வழங்கி, அவர்களை உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சியாளர்களாக உருவாக்கும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ