)
தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் இவை சரியாக சென்று சேர வேண்டும் என்பதற்காக உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் அரசு அதிகாரிகளை மக்கள் இருக்கும் பகுதிகளுக்கே வரவழைத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்ற ஒரு சிறப்பு திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனவு திட்டம் என்று சொல்லப்படும் இது சமூக பாதுகாப்பு திட்டங்களில் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

2024-25ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கலின் போது, பிப்ரவரி 19 அன்று இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தில் மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சுமார் ஐந்து லட்சம் கடைக்கோடி ஏழை குடும்பங்களை கண்டறிந்து, அவர்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து, ஒரே குடையின் கீழ் வழங்குவதாகும். இதன் மூலம் அவர்களை வறுமையிலிருந்து முழுமையாக மீட்டெடுத்து, ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த திட்டத்தின் கீழ், சமூகத்தில் மிகவும் நலிவடைந்த பிரிவினர் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்படுவர். உதாரணமாக தனியாக வசிக்கும் முதியவர்கள், ஆதரவற்றவர்கள், பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள், ஒற்றை பெற்றோரை கொண்ட குடும்பங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்பு உதவி தேவைப்படும் குழந்தைகளை கொண்ட குடும்பங்கள் ஆகியோர் பயனடையலாம்.
தாயுமானவர் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி, அவர்களின் நீண்டகால மேம்பாட்டிற்கான உதவிகளும் வழங்கப்படும். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் வீட்டு வசதி போன்ற அரசின் அனைத்து நலத்திட்டங்களும், இந்த திட்டத்தின் கீழ் கண்டறியப்படும் குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். பெற்றோர் இருவரையும் இழந்து, உறவினர்களின் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை, அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இது, அந்த குழந்தைகள் தடையின்றி தங்கள் கல்வியைத் தொடர பெரிதும் உதவும். பள்ளி படிப்பை முடித்தவுடன், இந்த குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்படும்.
இந்த திட்டத்திற்கு என்று தனியாக விண்ணப்பிக்க இணையதளம் எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை. மாறாக, ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை கண்டறிந்து, அங்கு நடத்தப்படும் கணக்கெடுப்பின் மூலமே தகுதியான பயனாளிகள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்காக, ரூ.27,922 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம், சமூகத்தில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களுக்கு, தாயுள்ளத்தோடு அரசு அரவணைப்பு அளிக்கும் ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ