)
CM MK Stalin : திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் மூங்கில்தொழுவு பகுதியில், மடத்துக்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டத்தில், சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) சண்முகவேல் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகத் தலைமறைவான மூன்று நபர்களைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதனிடையே உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கொலையின் பின்னணி
தோட்டத்தில் பணிபுரிந்து வந்த மூர்த்தி என்பவரின் குடும்பத்தினருக்கும், அவரது மகன்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறே இந்தக் கொடூர சம்பவத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது. மதுபோதையில் இருந்த தந்தைக்கும் மகன்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையை அறிந்த அக்கம்பக்கத்தினர் 100-க்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடிமங்கலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், சண்டையைத் தடுக்க முயன்றுள்ளார். மேலும், காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்துள்ளார். இந்தச் சூழ்நிலையில், ஆத்திரமடைந்த மூர்த்தி மற்றும் அவரது மகன்கள், சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். மேலும், அருகில் இருந்த மற்றொரு காவலரையும் வெட்ட முயன்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலீஸ் விசாரணை
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், கூடுதல் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலின் உடல் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து டிஜிபி சசிமோகன், சம்பவத்தின்போது அங்கிருந்த காவல்துறை ஜீப் ஓட்டுநர் அழகுராஜாவிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், ஜீப் ஓட்டுநருக்கும் சிறிய காயம் ஏற்பட்டது தெரிய வந்தது.
சட்டமன்ற உறுப்பினர் விளக்கம்
மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான மகேந்திரன், "கொலையில் ஈடுபட்டவர்கள் எனது தோட்டத்தில் புதிதாகச் சேர்ந்தவர்கள். அவர்கள் யார், என்ன விவரம் என்பது எனக்குத் தெரியாது" எனத் தெரிவித்துள்ளார்.
தனிப்படை தேடுதல் வேட்டை
இந்தக் கொடூரக் கொலையில் தொடர்புடைய தந்தை மூர்த்தி, மற்றும் அவரது மகன்கள் தங்கப்பாண்டியன், மணிகண்டன் ஆகியோரை உடனடியாகப் பிடிக்க, மாவட்ட காவல்துறை சார்பில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தலைமறைவான குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். காவல்துறை அதிகாரி ஒருவர் பணியில் இருக்கும்போதே கொல்லப்பட்ட இந்தச் சம்பவம், திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை வட்டாரத்தில் இது ஒரு பெரிய சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் இரங்கல் மற்றும் நிதியுதவி
இந்நிலையில் உயிரிழந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருப்பதுடன், ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார். " சண்முகவேல் அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்," என்று அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ