)
Admk On CM Vijay: தமிழகத்தில் விஜய் தலைமையில் தவெக ஆட்சி நடந்து வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் அரசியல் மாற்றம் நடந்துள்ளது. அதாவது, தேர்தலில் தனித்து களம் கண்ட தவெக, 108 இடங்களில் வென்றது. தொடர்ந்து ஆட்சி அமைப்பதற்கு சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, தவெக ஆட்சி அமைந்துள்ளது.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, திமுக அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதிமுக தவெக கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி, முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் கேட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் நேற்று தெரிவித்து இருந்தார். இதற்கு தற்போது அதிமுக துணைப் பொது செயலாளர் கே.பி.முனுசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் புதியதாக அதிமுகவின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராமு அவர்களின் தலைமையில் புதிய அதிமுக அலுவலகத்தை திறந்து வைத்த கே.பி.முனுசாமி பேட்டி அளித்தார். மின்துறை அமைச்சர் நிர்மல் குமார், எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்திக்க விஜய் முயன்றும் மறுத்துவிட்டதாக பேசியது குறித்த கேள்விக்கு முனுசாமி பதிலளித்துள்ளார்.
அவர் பேசுகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை முதல்வர் விஜய் சந்திக்க நேரம் கேட்டதாக சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்தார். மேலும் ஒருகருத்தாக இபிஎஸ் அவர்களையோ, அவரது அலுவலகத்தையோ தொடர்புக்கொள்ளவில்லை, மாறாக வேறு அதிமுக தலைவர்களிடம் கேட்டதாகவும் இப்போது வேண்டாமென அவர்கள் சொன்னதாக சொல்வது முற்றிலும் தவறானது. எந்த சூழலிலும் விஜய், அவரது அலுவலகத்திலிருந்தோ எடப்பாடி பழனிசாமி சந்திக்க நேரம் கேட்கவில்லை
தமிழக முதல்வர் ரீல்ஸ் விட்டு, இன்ஸ்டாகிராமில் சினிமா போல உணர்ச்சிகளை தூண்டி இளைஞர்களை தன் பக்கம் இழுத்துள்ளார். மாயத்தோற்றத்தை உருவாக்கி, இளைஞர்களிடம் தன் பெற்றோரையும் விஜய்க்கு வாக்களிக்க வேண்டுமென வற்புறுத்தியதால் வெற்றி பெற்றுள்ளார்.. விஜய் வெற்றி இந்த சமூகத்திற்கு செய்த தியாகத்திற்கோ, உழைப்பிற்கோ கிடைத்ததல்ல. குறிப்பிட்ட சதவிகிதம் மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளனர். எந்தக் கட்சியும் தீர்ந்து போகாது. கம்யூனிஸ்ட் ஆட்சிக்கே வர முடியாது என்றாலும் கொள்கையை முன்நிறுத்தி இருப்பார்கள். விஜய் பார்த்து படிப்பவர், அவரிடம் சரக்கு இல்லை” என்றார்.
அதிமுகவையோ அதன் தலைவர்கள் எம்ஜிஆர், அம்மாவை விமர்சிக்காதபோது, அதிமுக தவெகவிற்கு ஆதரவாக இருந்தால் என்ன தவறு என்கிற கேள்விக்கு, ”31 ஆண்டுகால ஆட்சியில் இருந்த இயக்கம். தேசிய கட்சிகள் அதிமுகவுடன் இனைந்து போட்டியிட்ட அதிமுக தனித்துவத்தை எப்படி இழக்கும். எம்ஜிஆர், அம்மாவை விமர்சிக்காதவர் பெரும்பான்மை இல்லை என்றால் விஜய் யாரை சந்தித்திருக்க வேண்டும் என்றார் கேபி முனுசாமி.
தொடர்ந்து பேசிய அவர், ”நிர்மல் குமாரை விட ஆதவ் அர்ஜூனா சந்தர்பவாதி. அதிகாரம் உள்ள இடத்திற்கு சென்றுவிடுவார். நாங்கள் மறைந்தால் அதிமுக கொடி போடுவார்கள். ஆதவ் அர்ஜூனா மறைந்தால் எத்தனை கட்சி கொடி போர்த்துவது? அவர் பேட்டியளிக்க தகுதியானவர் அல்ல என்றார்.
திமுக தோல்விக்கான காரணத்தை ஆராயமல், விசிகவை விமர்சிப்பதா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த, ”விசிக தலைவர் திருமாவளவன், கீழே இருந்து வளர்ந்த தலைவர். சமூகத்தின் போராளி என்றுக்கூட சொல்லலாம். இப்படி பேச அவரின் மனம் எவ்வளவு புண்பண்டிருக்கும் திமுக தலைவரை மனதார ஏற்று 11 ஆண்டுகள் தொடர்ந்து கூட்டணியில் இருந்தார். திமுக தலைவர்களை அன்போடு, முக மலர்ச்சியோடு சந்தித்திருப்பார். அவரை இப்படி பேசக்கூடாது என திமுக தலைவர் தெரிவிக்க வேண்டும்.
விஜய் சினிமா பாணியில் பேசுவதால் அவரின் முன்னாடி உள்ளவர்கள் கை தட்டலாம். முகம் சுழிப்பவர்கள் எத்தனை பேர் என்பதை உணர வேண்டும். உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் மாநில முதல்வர். தவெகவிற்கு கட்சி அமைப்பே இல்லையே. அதிமுக குக்கிராமங்களில் கிளை உள்ளது. உங்களுக்கு எங்கு இருக்கிறது. இன்ஸ்டா கம்பியூட்டர் என இருக்கிறார். மனிதனுக்கு கொள்கை, சிந்தனை உள்ளது. உங்களிடம் இருப்பவர் எத்தனை நாள் இருப்பார் என தெரியாது.. ஒரு விநாடி மாறினால் என்ன நடக்கும், முதல்வர் பாசத்தோடு இருக்க வேண்டும் என்றார்.
அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடுமா என்கிற கேள்விக்கு, ”இடைத்தேர்தல் வரட்டும் எப்படி இருக்கும் என பாருங்கள். எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் காப்பாற்றியவர் அம்மா, அவர் வழியில் எடப்பாடி பழனிசாமி உழைக்கிறார். போதை பொருட்களை ஒழிப்பேன், சிங்கப்பெண் என்றால் எத்தனை அலுவலகம் திறந்தீர்கள், நிதி ஒதுக்கியது எவ்வளவு, தனி திறனை எப்போது கற்பிப்பீர்கள், கஞ்சா விற்றவனை காட்டிக்கொடுத்தால் கொலை செய்கிறார்கள்.. கடுமையான உத்தரவு போட்டு நடவடிக்கை எடுத்தால் இதுபோன்றவற்றை தடுக்க முடியும்” என்றார்.