Chennai Metro Rail: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) இரண்டாம் கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட திட்டமாக, மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ தூரத்திற்கும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை 26.1 கி.மீ., தூரத்திற்கும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ., தூரத்திற்கும் என கூடுதலான மூன்று வழித்தடங்கள் உருவாகப்பட்டு வருகின்றன.
Chennai Metro Rail: நிலையான வருவாயை தரும் திட்டங்கள்
இதில் பூந்தமல்லி பைபாஸ் - போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், மெட்ரோவின் ஒட்டுமொத்த பணிகளும் முடிவடைந்த பிறகு, மெட்ரோ ரயில் நிலையங்களைப் பராமரிப்பது மற்றும் அதனை இயக்குவதன் மூலம் கூடுதல் வருவாயை ஈட்ட ஒரு மாபெரும் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) வகுத்துள்ளது.
இது வெறுமனே நிலையங்களைச் சுற்றியுள்ள நிலத்தை விற்பது அல்லது வாடகைக்கு விடுவது அல்ல. இது சென்னை நகரின் முக்கியமான பொதுப் போக்குவரத்து மையங்களை, வர்த்தகம், பொழுதுபோக்கு மற்றும் பொதுச் செயல்பாடுகளுக்கான ஒருங்கிணைந்த மையங்களாக மாற்றும் திட்டமாகும்.
Chennai Metro Rail: நான்கு முக்கிய அம்சங்கள்
குறிப்பாக, சென்னை மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் முக்கிய வழித்தடமான தடம் நான்கை (Corridor 4) உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். அதாவது பூந்தமல்லி பைபாஸ் முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள மெட்ரோ ரயில் பாதையில், மொத்தம் 12 இடங்களில் இந்தச் சொத்து மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளன. இது 90,000 சதுர அடிக்கும் அதிகமான நிலப்பரப்பை உள்ளடக்கியது. இந்தத் திட்டத்தின் கீழ் நான்கு முக்கிய அம்சங்கள் உள்ளன. அவரை என்னென்ன என்பதை ஒவ்வொன்றாக காணலாம்.
1. ஒருங்கிணைந்த மற்றும் தனித்த வணிக வளாகங்கள்
மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளுடன் இணைக்கப்படும் அல்லது தனியாகச் செயல்படும வணிகக் கட்டிடங்களாகவும் மற்றும் அலுவலக வளாகங்களாகவும் இருக்கக்கூடும். சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் 2,018 சதுர மீட்டர் பரப்பளவில் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
2. பல அடுக்கு வாகன நிறுத்துமிடம்
நகரின் மையப் பகுதிகளில் வாகன நிறுத்தும் நெருக்கடியைக் குறைக்க, பல அடுக்கு கார் பார்க்கிங் வசதிகள் அமைக்கப்பட இருக்கின்றன. இதற்குச் சிறந்த உதாரணமாக வளசரவாக்கம் அடுத்து ஆலப்பாக்கம் (Alappakkam) ரயில் நிலையத்தை சொல்லலாம்.
3. பொதுப் பகுதி மேம்பாடு (Place-Making)
இதில் மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படுவது, தடம் 4-ம், தடம் 5-ம் பிரியும் சந்திப்புப் பகுதி தான். சுமார் 5,010 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த பகுதியை, வெறும் வணிகப் பயன்பாட்டுக்கு மட்டுமின்றி, இயற்கை எழில் கொஞ்சும், பசுமையான, நடைபாதைக்கான பொது இடமாக (Landscaped Pedestrian-Friendly Public Space) மேம்படுத்த CMRL திட்டமிட்டுள்ளது. இது அந்த பகுதியைச் சேர்ந்த மக்களுக்குப் புதிய சமூக மையமாக அமையும். அதாவது காலையில், மாலையில் வாக்கிங் வரலாம். அமைதியாக நேரத்தை குடும்பத்துடன் செலவழிக்கலாம்.
4. கட்டட வடிவமைப்பு
தடம் 4-ன் மேற்கு முனையில் உள்ள காட்டுப்பாக்கம் மற்றும் ஐயப்பன்தாங்கல் போன்ற நிலையங்களிலும் கணிசமான நிலப்பரப்பில் (முறையே 1,338 மற்றும் 1,190 சதுர மீட்டர்) பரப்பளவில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன. கட்டடங்களின் வடிவமைப்பைப் பொறுத்தவரை, பெரும்பாலான கட்டமைப்புகள் தரைக்கு மேல் மூன்று தளங்கள் (Stilt plus three floors) வரை உயரும். போட் கிளப் போன்ற சில தனித்த இடங்களில் அடித்தள வசதியும் (Basement) இடம்பெறுகிறது.
Chennai Metro Rail: நகர்ப்புற மையங்கள்
CMRL, இந்தத் திட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்கி செயல்படுத்த உள்ளது. இந்த மேம்பாட்டுத் திட்டங்கள் அனைத்தும் உயரிய சுற்றுச்சூழல் தரமாகிய IGBC பிளாட்டினம்-நிலை பசுமைச் சான்றிதழைப் (IGBC Platinum-level green certification) பெறும் நோக்குடன் வடிவமைக்கப்பட உள்ளன. இங்கு, உள்ளூர் மர வகைகளுக்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கான சிறிய பகுதிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மெட்ரோ ரயில் நிலையத்தை மையமிட்ட இந்தத் தனித்துவமான திட்டங்கள் அனைத்தும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு நிலையான வருவாய் ஆதாரத்தை வழங்கும். அதோடு, சென்னைக்கு உலகத் தரம் வாய்ந்த, நன்கு திட்டமிடப்பட்ட, போக்குவரத்து, வணிகம் மற்றும் சமூகம் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய நகர்ப்புற மையங்களை (Urban Hubs) உருவாக்க வும் உதவிகரமாக இருக்கும்.
மேலும் படிக்க | சென்னை வேளச்சேரி மேம்பாலத்திற்கு திடீர் தடை... CMRL செய்த சம்பவம் - என்ன காரணம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









