)
Coimbatore Commissioner Explains Why The Girl Would Go There At 11 Pm: கோவை கல்லூரி மாணவி மீது நடந்த கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட மூவரை காவல் துறை நேற்று (நவம்பர் 03) கைது செய்தது. இந்த நிலையில், இந்த வழக்கு சார்ந்த விசாரணை முன்னேற்றங்கள் குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.
பெண்களின் பாதுகாப்பிற்காக 'காவலன்' எனப்படும் மொபைல் செயலியைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய அவர், "பெண்கள் தங்கள் மொபைலில் 'Kavalan SOS' ஆப்பை பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும். ஆபத்தான சூழலில் மொபைலை மூன்று முறை ஷேக் அல்லது ஆப்பில் உள்ள எஸ்ஓஎஸ் பொத்தானை அழுத்தினாலே அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு உடனடி அழைப்பு (SOS Call) செல்கிறது. 100 எண்ணுக்கு அழைக்க கூட தேவையில்லை" என்றார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம் கூறும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகி வருகிறது. இது தொடர்பாக, "அந்த பெண் அந்த நேரத்தில் அந்த இடத்துக்கு ஏன் போனாள்?" என்ற கேள்வியையும் செய்தியாளர் ஒருவர் எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஆணையர் சரவண சுந்தர், "ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரும் தீர்ப்பு வழங்கவோ விமர்சிக்கவோ கூடாது. பெண்கள் எங்கு செல்வது, எப்படி நடப்பது என்பது அவர்களது சுயாதீன முடிவு. சமூகத்தில் யாரும் 'அது சரியா தவறா' என்று தீர்மானிக்கத் தேவையில்லை. அந்த பெண்ணின் தனிப்பட்ட விஷயங்களை மதிக்க வேண்டும். அவர்களை குற்றவாளியாகக் காட்டும் முயற்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று தெளிவாகக் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "கடந்த இரண்டு நாட்களாக குற்றவாளிகளை அடையாளம் கண்டு பிடிப்பதில் தீவிரமாக செயல்பட்டோம். மூவரையும் கைது செய்துள்ளோம். இனி வழக்கின் அனைத்து அம்சங்களும் விரிவாக விசாரிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணை அதிகாலை 4 மணியளவில் மீட்டோம். கைது செய்யப்பட்டவர்கள் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லாதவர்கள்" என்று தெரிவித்தார்.
சரவண சுந்தரின் இந்த பதில் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெண்களின் சுதந்திரம் மற்றும் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்ற அவரது கருத்துக்கு பொதுமக்களும் பெரிதும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ