கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வேண்டும் - ஓபிஸ்

கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் - ஓபிஸ்

Written by - ZEE Bureau | Last Updated : Nov 14, 2021, 02:31 PM IST
கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வேண்டும் - ஓபிஸ்

அஇஅதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த இரு தினங்களாக சென்னையில் மழைவெள்ளதால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளை பார்வையிட்டு அஇஅதிமுக சார்பாக நிவாரண உதவிகளையும் வழங்கினார். இதன் தொடர்ச்சியாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில்,  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, 11-11-2021 அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடந்த நிலையில், சென்னை உட்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் அதிகன மழை பெய்ததன் விளைவாக பதினான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். 

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு என் சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக ஆட்சிக் காலத்தில் 'நிவர்' புயல் உருவாகி கனமழை ஏற்பட்ட சமயத்தில் உயிர்ச் சேதத்தை தடுக்க கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தபோதும், எதிர்பாராத விதமாக புயல் மற்றும் கனமழை காரணமாக நான்கு பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டதோடு, அவர்களது குடும்பங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நான்கு இலட்சம் ரூபாயும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஆறு இலட்சம் ரூபாயும், ஆக மொத்தம் பத்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது. 

ops

புதுச்சேரியில் கரை கடந்த நிவர் புயல், சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் தீவிரக் காற்றுடன் கூடிய கனமழையை அளித்துவிட்டுச் சென்றது. நிவர் புயல் மிகக் கடுமையாக இருந்தபோதும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததற்குக் காரணம் அரசின் சிறப்பான தயார் நிலை மற்றும் காலத்திற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று தலை சிறந்த நிர்வாகிகளும், வல்லுநர்களும் அதிமுக அரசைப் பாராட்டினர். அதே சமயத்தில் காற்றழுத்த தாழ்வு உருவாகியதையடுத்து அண்மையில் பெய்த கனமழை காரணமாக பதினான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய காற்றழுத்த தாழ்வினை ஒப்பிடும்போது,

நிவர் புயலின் தாக்கம் பன்மடங்கு அதிகம், இருப்பினும் உயிரிழப்பு குறைவு, ஆனால் தற்போது தாக்கம் குறைவு, உயிரிழப்பு அதிகம், இதற்குக் காரணம், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஏற்பட்ட தொய்வுதான் என்று தமிழக மக்கள் கருதுகிறார்கள், இந்தச் சூழ்நிலையில், தற்போது கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தமிழ்நாட்டில் மொத்தம் பதினான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பத்து நாட்களுக்குள் தலா நான்கு இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய்த் துறை அமைச்சர் அவர்கள் அறிவித்து இருக்கிறார். ஏற்கெனவே, ஓராண்டிற்கு முன்பு நிவர் புயல் மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிமுக ஆட்சியில் பத்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டிருக்கிற நிலையில், தற்போது நான்கு இலட்சம் ரூபாய் நிவாரண நிதி என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. 

ஏற்கெனவே உயர்த்தி அறிவிக்கப்பட்டதை குறைத்து அறிவிப்பது இயற்கை நியதிக்கு முரணானது. அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் பத்து இலட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் வழங்க வேண்டும் என்பதுதான் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு, அண்மையில் பெய்த கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் பத்து இலட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் வழங்க உத்தரவிட வேண்டுமென்று அதிமுக சார்பில் கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

ALSO READ பொது இடத்தில் பெண்ணிடம் அத்துமீறல் காவலர் சஸ்பெண்ட்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News