அன்பானவன் அடங்காதவன் அசாரதவன் பட விவகாரத்தில் சிம்பு தொடர்ந்த வழக்கில் விஷாலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்......


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து வெளியான படம் அன்பானவன், அசராதவன், அடங்காதவன். இந்த படத்தில் நடிப்பதற்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில், படம் தோல்வி அடைந்ததை காரணம் காட்டி 1 கோடியே 51 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக நடிகர் சிம்பு புகார் கூறி இருந்தார்.


இது தொடர்பாக சிம்புவும், மைக்கேல் ராயப்பனும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால், ஒருதலைபட்சத்துடன் மைக்கேல் ராயப்பனுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாகவும் மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிம்பு மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.


இதற்காக விஷாலும், மைக்கேல் ராயப்பனும் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் சிம்புவின் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது. இந்த மனு இன்று நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சங்கங்களின் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்கள் கட்ட பஞ்சாயத்து செய்வதாக சிம்பு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. 


மேலும், புதிய படங்களில் தாம் ஒப்பந்தம் செய்து கொள்வதில், தயாரிப்பாளர் சங்கமோ, நடிகர் சங்கமோ தலையிடக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. வாதங்களைக் கேட்ட நீதிபதி, இது தொடர்பாக ஜனவரி 18 ஆம் தேதிக்குள் பதிலளிக்க விஷால், மற்றும் மைக்கேல் ராயப்பனுக்கு உத்தரவிட்டார்.