)
CPIM Balakrishnan About Vijay : மயிலாடுதுறை அருகே அடியாமங்கலத்தில் காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்ட வைரமுத்து குடும்பத்தாரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காதல் விவகாரத்தில் வைரமுத்து என்ற இளைஞர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். வைரமுத்து பெற்றோரையும், அவர் காதலித்த பெண்ணையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, அவர்களுக்கு பாதுகாப்பாகவும், வழக்கு நடத்துவதற்கு பக்கபலமாகவும் இருப்போம் என்று சொல்லியுள்ளோம். வெட்கி தலை குனியக்கூடிய சம்பவம் இது. நீண்ட காலமாக சாதிய கொடுமைகளை எல்லாம் எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்ற டெல்டா பகுதியில் காதல் திருமணத்துக்கு எதிராக பெண்ணின் உடன் பிறந்தவர்களே கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை சம்பவத்துக்கு முன்னதாக அடையாளம் தெரியாத நபர்கள் நடமாட்டம் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதனால் இது குறித்து போலீஸார் முழுமையாக விசாரித்து, தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். இதுபோன்ற படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு ஆணவப் படுகொலைக்கு எதிரான தடுப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கொலைக்கு நேரடியாக தொடர்புடையவர்கள் மட்டுமல்லாது, மறைமுகமாக அதை தூண்டும் வகையில், பின்புலமாக உள்ள பல்வேறு சாதிய அமைப்புகளை சார்ந்தவர்களும் கைது செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இந்த சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வளவுக்குப் பிறகும் தமிழக அரசு அச்சட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது கொஞ்சமும் ஏற்புடையது அல்ல. உடனடியாக தமிழக அரசு அச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
மயிலாடுதுறையில் இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை பாதுகாக்கும் பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த குடும்பத்தாருக்கு உரிய நஷ்ட ஈடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இது போன்ற காதல் திருமணங்களை தடுப்பவர்களுக்கு எதிராக எல்லா ஜனநாயக அமைப்புகளும் குரல் எழுப்ப வேண்டும். சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட பெற்றோர் தனது பிள்ளையின் திருமணத்துக்கு எதிராக இருந்தது என்பது என்ன நியாயம்? இவர்களுக்கு பின்னால் இருந்து வேறு யாரோ இதை ஊக்குவித்திருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் அழுத்தமான சந்தேகம். அதை காவல் துறை கண்டுபிடிக்க வேண்டும். இந்தியா முழுவதும் திரைத்துறையினருக்கு கூட்டம் கூடுவது இயல்பு.
அந்த வகையில் தவெக தலைவர் விஜய்க்கு கூட்டம் கூடுகிறது. அது வாக்குகளாக மாறுமா மாறாதா என்பது தேர்தலுக்குப் பின்னர் தெரியும். அதுமட்டுமல்ல அவர் எந்தவொரு ஆக்கப்பூர்வமான கொள்கையையும் சொல்லவில்லை. உலகில் காசாவில் பெரிய அளவில் இனப்படுகொலை நடைபெறுகிறது, மத்திய அரசின் பல்வேறு மோசமான நடவடிக்கைகள் உள்ளன. இவை பற்றியெல்லாம் ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை. சினிமாவில் வசனம் பேசுவது போல பேசுகிறார். இன்று பல நிலைகளில் அரசியல் விழிப்புணர்வுடன் உள்ள இளைஞர்கள் எப்படி இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை என்றார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சிந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ