)
DMK ADMK Alliance Speculation: தமிழ்நாட்டின் அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் இந்த வேளையில், ஒவ்வொரு அரசியல் தலைவர்கள், நிர்வாகிகள், பிரமுகர்களின் அதிக முக்கியத்துவத்தை பெறும். சிபிஐ மற்றும் சிபிஎம் என இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களின் ஆதரவை தெரிவித்தும், தவெகவால் இன்னும் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க இயலவில்லை.
இந்தச் சூழலில், மதுரை நரிமேடு பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில், இன்று (மே 9) நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கலந்து கொண்டார். மார்க்சிய ஆசான் தோழர் எஸ்.ஏ.பி அவர்களின் நூலை அவர் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் கே.பாலபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் அகில இந்திய பொது செயலாளர் பேபி பேசுகையில், "மக்களின் தீர்ப்புக்கு எதிராக செயல்பட டெல்லி (மத்திய பாஜக) முயற்சிக்கிறது. குறிப்பாக, அதிமுக மூலம் பின்வாசல் வழியாக ஆட்சி அதிகாரத்துக்கு வர பாஜக முயற்சிக்கிறது.
குதிரை பேர நடைமுறைக்கு நாங்கள் எதிரானவர்கள். கவர்னரின் கால தாமதம் காரணமாகவே இது (குதிரை பேரம்) நடக்கிறது. டிடிவி தினகரன் புகார் தொடர்பாக எனக்கு தெரியாது. தவெக அளித்த கடிதம் குறித்து ஆராய வேண்டியது ஆளுநரின் வேலை அல்ல.
தனிப்பெரும் கட்சிக்கு ஆட்சி அமைக்க அனுமதி கொடுப்பது மட்டுமே ஆளுநர் செய்ய வேண்டியது. விஜய் மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியாக உள்ளார். அவர் மதச்சார்பின்மை அரசை அமைப்பதாக தான் எங்களிடம் தெரிவித்துள்ளார். டெல்லி இங்கு ஆட்சியை பிடிக்க முயல்வது தவறு. நாங்கள் தவெக விஜய்யை நம்புகிறோம்.
திமுக - அதிமுக ஆட்சி அமைப்பதாக வந்த தகவல் வதந்தி. ஆனால், அதிமுக ஆட்சி அமைக்க முயற்சி எடுத்தது உண்மை. அவர்கள் பாஜக கூட்டணியில் உள்ளார்கள். அதனால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம். எங்களுக்கும் திமுகவுக்கும் எந்த சிக்கலும் இல்லை. கூட்டணி சுமூகமாக தொடர்கிறது. நேற்று கூட அக்கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினேன். எங்கள் மாநில குழுவினரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள்" என்று பேசினார்.
முன்னதாக, திமுக - அதிமுக ஆட்சியமைக்க முயற்சிப்பதாக எம்.ஏ. பேபி தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் India Today TV ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "எங்கள் தமிழகத் தலைவர்கள் ஸ்டாலின் உடன் சந்திப்புகளை நடத்தினர். அதிமுக தலைமையிலான அரசுக்கு திமுக ஆதரவளிக்கும் என்ற யோசனை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், நாங்களும் அத்தகைய ஏற்பாட்டிற்கு ஆதரவளிக்க வேண்டும் என திமுக விரும்பியது.
அதிமுக ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளிப்பதற்கு தாங்கள் முடிவெடுத்திருப்பதாக திமுக எங்களிடம் கூறியது. நாங்களும் அதே முடிவை எடுக்க வேண்டும் என அவர்கள் விரும்பினர். தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது. திமுகவும் தோல்வியடைந்தது. நாங்கள் திமுக கூட்டணியில் அங்கம் வகித்ததால், நாங்கள் தோற்றோம், நாங்கள் அரசை அமைக்கவில்லை. தமிழக சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் கட்சிக்கு (தவெக) ஆதரவளிக்கிறோம்" என பேசியிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டது.
ஆனால், இன்று இத்தகைய கருத்துகள் முற்றிலும் வதந்தி என எம்.ஏ. பேபி தெரிவித்துள்ளார். இதன்மூலம், திமுக - அதிமுக கூட்டணி முயற்சி குறித்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது X பக்கத்தில், "நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார். இதன்மூலம், திமுக - அதிமுக கூட்டணி என்பது பேச்சுவார்த்தையில் இல்லை என்பதும் உறுதியாகிறது. திமுகவை போலவே, தனிப் பெரும் கட்சியான தவெகவை குறிப்பிடாம், ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்து என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை. ஆனால், தனிப்பெரும் கட்சியாக விளங்கும் தவெக 108 இடங்களையே பெற்றது. அதிலும் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிட்டு வென்றார். அதில் ஓரிடத்தை ராஜினாமா செய்ய வேண்டும். இதனால், தவெகவின் தனிப்பெரும் பலம் 107 தான்.
அந்த வகையில், கடந்த மே 6ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, தவெக உடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்தது. இதனால், தவெகவின் பலம் 112 ஆக உயர்ந்தது. தவெக ஆட்சி அமையும்பட்சத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க அதிக வாய்ப்புள்ளது. இதன்மூலம், 50 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பிரதிநிதித்துவத்தை பெறும் வாய்ப்பும் உள்ளது.
இது ஒருபுறம், வரும் மே 10ஆம் தேதியுடன் ஆட்சியமைக்க காலஅவகாசம் நிறைவடைகிறது என்பதாலும், ஒருவேளை அன்று வரை யாரும் ஆட்சியமைக்காவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வர வாய்ப்புள்ளது. எனவே, குடியரசுத் தலைவர் ஆட்சி வந்தால் மத்திய பாஜக, அதன் ஆளுகையை தமிழ்நாட்டில் செலுத்தும் என்பதால் தவெகவுக்கு ஆதரவு அளிக்கிறோம் என சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தின.
இதன்மூலம், தவெக ஆதரவு 112இல் இருந்து 116 உயர்ந்தது. இன்னும் 2 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். திமுக கூட்டணியில் இடம்பெற்ற ஐயூஎம்எல் ஆதரவளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. விசிக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. மாலை 4 மணிக்கு விசிகவின் நிலைப்பாடு தெரியவரலாம்.
விசிக தவெகவுக்கு ஆதரவு அளிக்கும்பட்சத்தில், தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்கலாம். தற்போது தவெக மீது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குதிரை பேர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதன் மீது ஆளுநர் என்ன முடிவை எடுப்பார்?, விஜய்யை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பாரா? உள்ளிட்ட கேள்விகளுக்கு இன்றே விடை தெரியலாம்.