)
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 21ம் தேதியை சிறப்பு விடுமுறையாக அறிவித்து, தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுமுறை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால் அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வெளியூர்களில் பணிபுரிவோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடிவிட்டு திரும்ப வசதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய அக்டோபர் 18 மற்றும் 19ம் தேதிகள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏற்கனவே மூன்று நாட்கள் தொடர் விடுமுறை உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், பண்டிகைக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமையையும் விடுமுறையாக அறிவித்தால் மக்கள் அவசரமின்றி பயணிக்க முடியும் என்பதே இந்த கோரிக்கையின் முக்கிய நோக்கம் ஆகும்.

வேலை மற்றும் படிப்பு காரணமாக சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள், தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைகளுக்குத் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். திங்கட்கிழமை பண்டிகை முடிந்து, செவ்வாய்க்கிழமை உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டிய சூழல், பயணத்தில் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதைக்கருத்தில் கொண்டு, பொது மக்களின் வசதிக்காக தீபாவளிக்கு மறுநாளையும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், தமிழ்நாடு தலைமை செயலகச் சங்கம் சார்பில் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கையில், "தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 18 முதல் 20 வரை மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. பண்டிகையை முழுமையாக கொண்டாடவும், சொந்த ஊர் சென்று திரும்புவதை எளிதாக்கவும், அக்டோபர் 21 செவ்வாய்க்கிழமையை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, வேறு ஒரு அரசு விடுமுறை நாளில் பணி தினமாக அறிவிக்கலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கை ஏற்கப்படும் பட்சத்தில், வெள்ளிக்கிழமை மாலையுடன் பணி முடிந்து சொந்த ஊர் கிளம்பும் ஊழியர்கள், தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை வரை விடுமுறையைப் பெறுவார்கள். இது கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் கொண்ட நீண்ட ஓய்வாக அமையும். இதன் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் என அனைத்து தரப்பினரும் மன அழுத்தம் இல்லாமல் தங்கள் குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாட ஒரு சிறந்த வாய்ப்பு உருவாகும். கடந்த சில ஆண்டுகளாகவே பொதுமக்களின் நலன் கருதி, இதுபோன்ற கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த ஆண்டும் சாதகமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ