திமுக - காங்கிரஸ்: தூது வந்த ப.சிதம்பரம்... அடம்பிடிக்கும் ராகுல் - ஸ்டாலினின் முடிவு என்ன?

DMK Congress Alliance: திமுக உடனான கூட்டணி தொடர்கிறது என்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்கிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.  

Written by - Sudharsan G | Last Updated : Mar 3, 2026, 03:13 PM IST
  • ஸ்டாலின் - ப. சிதம்பரம் பேச்சுவார்த்தை
  • செல்வப்பெருந்தகையும் பேச்சுவார்த்தையில் உடனிருந்தார்.
  • சுமார் ஒருமணிநேரம் பேச்சுவார்த்தை நடந்தது.
திமுக - காங்கிரஸ்: தூது வந்த ப.சிதம்பரம்... அடம்பிடிக்கும் ராகுல் - ஸ்டாலினின் முடிவு என்ன?

DMK Congress Alliance, Seat Sharing: திமுக - காங்கிரஸ் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததாகவும், முடிவை ராகுல் காந்தி இன்று அறிவிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Add Zee News as a Preferred Source

திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை

2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமை அதன் கூட்டணி கட்சிகளுடன் கடந்த பிப். 22ஆம் தேதி முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியது. சிறு சிறு கட்சிகளிடம் இருந்து பேச்சுவார்த்தையை தொடங்கிய திமுக, கடந்த பிப். 28ஆம் தேதி கூட்டணியின் இரண்டாவது பெரிய கட்சியாக பார்க்கப்படும் காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தியது. 

திமுகவின் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுக குழு, காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளை ஒதுக்குவதாக பேசியிருக்கிறது என்றும் ஆனால், காங்கிரஸ் கட்சியோ சுமார் 41 தொகுதிகள் வரை கேட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன. காங்கிரஸ் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்டு தொடர்ந்து வலியுறுத்தியும் வந்தது.

கலகம் செய்யும் கிரீஷ் சோடங்கர்  

அண்ணா அறிவாலயத்தில் அன்று பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததாக கூறினார். அப்போது காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு தலைவர் கிரீஷ் சோடங்கரும் உடனிருந்தார். அப்போது வாய் திறக்காத சோடங்கர், டெல்லியில் ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில், திமுக ஒதுக்கும் 25 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு போதுமானது இல்லை என்றும் நியாயமான ஒதுக்கீட்டுக்கு வலியுறுத்துவோம் என்றும் பேசியிருந்தார். மேலும், தவெக குறித்தும் தொடர்ந்து பாசிடிவ்வாகவே பேசி வந்தார்.

காங்கிரஸ் கேட்ட 39 தொகுதிகள்

காங்கிரஸ் மேலிடம் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு வாய்ப்பூட்டு போட்டாலும், கிரீஷ் சோடங்கருக்கு எவ்வித கட்டுபாடுகளும் இல்லை. அவர் தொடர்ந்து, திமுகவை சீண்டும் விதமாகவும், தவெக உடன் நெருக்கம் காட்டும் வகையிலும் பேசி வந்தார். மேலும், காங்கிரஸ் மேலிடம் குறைந்தபட்சம் 39 தொகுதிகளை திமுக ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

திமுக விதித்த கெடு?

ஆனால், திமுக 25 சட்டப்பேரவை தொகுதிகளுடன், 1 மாநிலங்களவை சீட்டையும் கொடுப்பதாக தெரிவித்தது. அதேநேரத்தில், மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு மார்ச் 5ஆம் தேதியோடு நிறைவடைய இருப்பதால், இன்றைக்குள் (மார்ச் 3) முடிவை தெரிவிக்கும்படியும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கெடுவிதித்தாக கூறப்பட்டது.

தேசிய அளவில் முக்கியத்துவம்

இந்தச் சூழலில், இன்று காலை முதலே அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு  ஏற்பட்டது. காங்கிரஸ், திமுகவை விட்டு வெளியேறுமா...? தவெக உடன் 'கை' கோர்க்குமா...? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஒருவேளை காங்கிரஸ் கட்சி கூட்டணியை உடைத்துக்கொண்டு வெளியேறினால், தேசியளவில் இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படும். இந்தியா கூட்டணியில் திமுக பெரும் செல்வாக்கான கட்சியாகவும், ஸ்டாலின் செல்வாக்கு நிறைந்த தலைவராகவும் திகழ்கிறார். எனவே, இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் சந்திப்பு 

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் இல்லத்திற்கு இன்று காலை வருகை தந்த செல்வப்பெருந்தகை, திமுக உடனான கூட்டணியை தக்கவைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. அங்கிருந்த ஒரே காரில் செல்வப்பெருந்தகையும், ப. சிதம்பரமும் சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வரும், திமுக தலைவருமான மு.க, ஸ்டாலினின் வீட்டுக்கு சென்றனர். அங்கு திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழியும் இருந்ததாக கூறப்படுகிறது. ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

கிரீஷ் சோடங்கர் இல்லை

தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினின் இல்லத்தில், அவருடன் ப.சிதம்பரம் மற்றும் செல்வப்பெருந்தகை ஆகியோர் சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தை குழு தலைவரான கிரீஷ் சோடங்கரோ அல்லது மூத்த தலைவரான கே.சி. வேணுகோபாலோ யாரும் இல்லை.

திமுக ஒதுக்கும் தொகுதிகள் எத்தனை? 

டெல்லியில் இருந்து வந்த செய்தியை ஸ்டாலினிடம் ப.சிதம்பரமும், செல்வப்பெருந்தைகையும் தெரிவித்துள்ளனர். 39 தொகுதிகளில் இருந்து 36 தொகுதிகள் வரை காங்கிரஸ் இறங்கி வந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இறுதியாக 28 சட்டப்பேரவை தொகுதிகளுடன், இரண்டு மாநிலங்களவை சீட்டை தருவதாக திமுகவும் இறங்கி வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சுமூக முடிவு என தகவல்...

தற்போது இந்த முடிவு காங்கிரஸ் மேலிடம் பக்கம் உள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிவை ராகுல் காந்தி இன்று அறிவிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மு.க. ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

கூட்டணி உறுதி, ஆனால்... 

ஆனால், மு.க.ஸ்டாலின் சந்திப்ப்புக்கு பின் ப. சிதம்பரம் செய்தியாளர்களை தவிர்த்துவிட்டு சென்ற நிலையில், செல்வப்பெருந்தகை மட்டும் செய்தியாளர்களை சந்தித்தார். திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது என்றும் பேச்சுவார்த்தை முடிந்ததும் முடிவு தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை என்றும் திமுக எந்தவித கெடுவையும் விதிக்கவில்லை என்றும் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்தார். 
ஸ்டாலின் உடனான சந்திப்பு என்பது மரியாதை நிமித்தமான சந்திப்பு, அடிக்கடி சந்திப்பதுதான் என்றும் அவர் தெரிவித்தார். கூட்டணி உறுதி என்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதும் அதை தெரிவிப்போம் என்றும் தெரிவித்த அவர், தற்போது தகவல் சொன்ன ஒன்றுமில்லை என்றார்.

மாநிலங்களவை சீட் 

காங்கிரஸ் கட்சிக்கு 2 மாநிலங்களவை சீட்டை கொடுக்க திமுக ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல்கள் கூறப்படும் நிலையில், தற்போதைய தேர்தலில் ஒன்றும், 2028 ஆண்டில் ஒரு சீட்டும் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2028ஆம் ஆண்டில் ப.சிதம்பரத்திற்கு தமிழ்நாட்டின் மாநிலங்களவை பதவிக்காலம் நிறைவடைய இருப்பது குறிப்பிடப்படுகிறது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 15ஆம் தேதி நடைபெற உள்ளதும் கவனிக்கத்தக்கது.

மேலும் படிக்க | ராஜ்யசபா தேர்தல் 2026: திமுக-வில் யாருக்கு அதிர்ஷ்டம்? CM ஸ்டாலினின் 'சர்ப்ரைஸ்' லிஸ்ட்!

மேலும் படிக்க | திமுகவிடம் காங்கிரஸ் வைத்த மெகா கோரிக்கை! கூட்டணியில் விலக முடிவா?

மேலும் படிக்க | Check வைக்கும் காங்கிரஸ்... படையோடு காத்திருக்கும் விஜய் - ஆட்டத்தை முடிப்பாரா ஸ்டாலின்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News