Big Announcements For Women: தமிழக அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தனது பட்ஜெட் உரையில் பெண்களுக்கு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதிலும் குறிப்பாக தமிழ்நாடு மகளிருக்கு ஐந்து முக்கிய மெகா அறிவிப்புகள் குறித்து பேசினார்.
தமிழ்நாடு பட்ஜெட் 2025: விடியல் பயணம்
மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கும் விடியல் பயணம் என்ற மகத்தான திட்டம் தமிழ்நாட்டு மகளிர் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள திட்டத்தின் மூலம் பேருந்து பயணம் செய்வோர்களில் பெண்களின் சதவீதம் 40 லிருந்து 65% ஆக உயர்ந்துள்ளது. தினமும் சராசரியாக 50 லட்சம் மகளிர் பேருந்துகளில் இதுவரை 642 கோடி பயணங்களை மேற்கொண்டு பெண்கள் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 888 ரூபாய் சேமிக்க முடிகிறது. இத்திட்டத்திற்காக மானியத்தொகை 3600 கோடி ரூபாயை 2025-26 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட் 2025: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 15 லட்சம் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 அவருடைய வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினால் பயன்பெறும் இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 என்பது அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு உதவியாக இருப்பது மட்டுமன்றி, அவர்கள் கணிசமாக சேமிக்கவும் வழிவகுக்கிறது. இதுவரை மகளிர் உரிமைத்தொகை பெற்றிடாத தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும். மகளிர் நலன் காக்கும் இத்திட்டத்திற்காக இந்த வரவு செலவு திட்டத்தில் 13807 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட் 2025: புதுமைப் பெண் திட்டம்
ஏழை குடும்பங்களை சார்ந்த மாணவியர் உயர்கல்வி பயில்வதை உறுதி செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், தற்போது 4,06000 மாணவியர்கள் மாதம்தோறும் 1000 ரூபாய் பெற்று பயனடைந்து வருகிறார்கள். இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பின் உயர்கல்வியில் சேரும் மாணவியர்களின் எண்ணிக்கை சென்ற கல்வி ஆண்டில் 19% அதிகரித்து கூடுதலாக 40,276 மாணவியர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என்பதை பெருமையுடன் இந்த மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். வரும் நிதியாண்டில் இத்திட்டத்தினை செயல்படுத்திட 420 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட் 2025: மகளிர் சுய உதவி குழு திட்டம்
36 ஆண்டுகளுக்கு முன்னர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தர்மபுரி மாவட்டத்தில் தொலைநோக்குடன் விதைக்கப்பட்ட சுய உதவி குழு திட்டம், இன்று கோடிக்கணக்கான மகளிரின் வாழ்வை மேம்படுத்திடும் இயக்கமாக உருவெடுத்துள்ளது. மகளிர் இடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்து அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றி சமுதாயத்தில் பெண்களுக்கு உரிய இடத்தினை உறுதி செய்திடும் நோக்கில் அவர்களின் வளர்ச்சிக்கும் திறன் மேம்பாட்டிற்கும் தேவையான நலத்திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
தற்போது 476 லட்சம் மகளிர் திட்ட சுய உதவி குழுக்கள் இயங்கி வருகின்றன. சுய உதவி குழு இயக்கத்தில் இதுவரை இணைந்திடாத மகளிர் மற்றும் விளிம்பு நிலைவாழ் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு 10000 புதிய சுய உதவி குழுக்கள் வரும் நிதியாண்டில் உருவாக்கப்படும். மேலும் வரும் நிதியாண்டில் சுய உதவி குழுக்களுக்கு 37,000 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட் 2025: மகளிர் விடுதிகள் திட்டம்
தமிழ்நாட்டின் முத்திரை விதிக்கும் திட்டங்களில் ஒன்றான தோழி பணிபுரியும் மகளிர் விடுதிகள் ஏற்கனவே தாம்பரம் திருச்சி உள்ளிட்ட 13 இடங்களில் 1303 மகளிர் பயன்பெறும் வகையில் வெற்றிகரமாக இயங்கி வருகின்றனர். எதிர்வரும் நிதியாண்டில் காஞ்சிபுரம், ஈரோடு, கரூர், மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மேலும் 10 இடங்களில் 800 பெண்கள் பயன்பெறும் வகையில், 77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திருக்கும் நோக்கத்துடன் நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் மாவட்டம் தோறும் தோழி விடுதிகள் அமைக்கப்படும் என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் இருந்தும் மாணவியர் தங்களது உயர்கல்வி கனவை நனவாக்கிடும் வகையில் பெருநகரங்களுக்கு வருகை புரியும்போது அவர்களுக்கு தரமிக்க மற்றும் பாதுகாப்பான விடுதி வசதிகள் அமைத்திட வேண்டிய தேவையை அரசு உணர்ந்துள்ளது. எனவே எதிர்வரும் நிதியாண்டில் சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய மாநகரங்களில் தலா ஆயிரம் மாணவியர் தங்கும் வகையில் அனைத்து நவீன வசதிகளுடன் மொத்தம் 275 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்.
தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தால் பராமரிப்பு பட இருக்கும் இவ்விடுதிகளின் சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும்.
தமிழ்நாடு பட்ஜெட் 2025: மூன்றாம் பாலினத்தவருக்கும் உதவித்தொகை
மூன்றாம் பாலினத்தவரின் நல்வாழ்விற்கென நாட்டிற்கே முன்னோடியாக பல்வேறு புதுமையான திட்டங்கள் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டினை உறுதி செய்து வாழ்க்கையில் வெற்றி பெற அவர்கள் உயர்கல்வி கற்பது இன்றியமையான ஆகும். எனவே புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகையை வழங்கும் திட்டம், இவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய விழிப்புணர்வினையும் வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்பையும் வழங்குவதன் மூலமே அவர்களுடைய கண்ணியமான வாழ்வினை உறுதி செய்திட முடியும் என்று இந்த அரசு உறுதியாக நம்புகிறது. இந்த உயர்நோக்கத்தினை முன்னிறுத்தி ஒரு முன்னோடி முயற்சியாக மூன்றாம் பால் இனத்தவரை போக்குவரத்து மேலாண்மை திருவிழா காலங்களில் கூட்டணி சூலை கட்டுப்படுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில் உரிய பயிற்சிகள் வழங்கி ஊர்க்காவல் படையில் ஈடுபடுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக 50 மூன்றாம் பாலினத்தவர்களைக் கொண்டு சென்னை, தாம்பரம், ஆவடி மாநகரங்களில் இம்முன்னோடி திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு பணிபுரியும் மூன்றாம் பாலினத்தவரின் மதிப்பூதியம் பயிற்சி மற்றும் சீருடை போன்றவை ஊர்க்காவல் படையினருக்கு சமமான வகையில் வழங்கப்படும். இந்த முன்னோடி முயற்சி மூலம் மூன்றாம் பாலினத்தவரின் சுயமரியாதையுடன் கூடிய வாழ்வு உறுதி செய்யப்படுவதுடன் அவர்கள் சமூக நீரோட்டத்தில் இரண்டற கலந்து வாழ்வதற்கான வாய்ப்பும் ஏற்படும்.
மேலும் படிக்க - TN Budget 2025: சென்னைக்கு அருகே வரும் புதிய நகரம்! இனி எல்லாமே அங்கே தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









