கச்சத்தீவு கைவிட்டுப் போகக் காரணமே திமுக தான் - மீண்டும் தாக்கிய விஜய்!

சமீபத்தில் தமிழக அரசு சட்டமன்றத்தில் கச்சத்தீவை மீட்போம் என்று தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்தனர். ஆனால் விஜய் எதிர்த்து கடிதம் எழுதி உள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Apr 4, 2025, 06:37 PM IST
  • திமுக நாடகம் ஆடுகிறது.
  • கச்சதீவை கொடுத்ததே அவர்கள் தான்.
  • விஜய் கடும் குற்றச்சாட்டு.
கச்சத்தீவு கைவிட்டுப் போகக் காரணமே திமுக தான் - மீண்டும் தாக்கிய விஜய்!

கச்சத்தீவை மீட்பதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் மீட்டு தமிழகம் கொண்டு வர வேண்டும். இது தொடர்பாக கடந்த 2ம் தேதி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். சட்டப்பேரவையில் இந்த தீர்மானத்திற்கு பல கட்சிகளும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திமுகவை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Add Zee News as a Preferred Source

விஜய் அறிக்கை

கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தரத் தீர்வு. ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனத்தை இலங்கை அரசு எப்போதும் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும். மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தலையாய கடமை. மீனவர்கள் நலன் மற்றும் கச்சத்தீவு சார்ந்த தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழுத் தீர்மானம் தந்த அழுத்தம், தமிழ்நாடு அரசைத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடான கச்சத்தீவு மீட்பு மற்றும் மீனவர் பாதுகாப்பு நிலைப்பாடு நோக்கி நகர வைத்துள்ளது. 1974-ல் கச்சத்தீவு கைவிட்டுப் போகக் காரணம், ஆட்சி அதிகாரப் பசி கொண்ட அன்றைய ஆளும் கட்சியான தி.மு.க தான்.

மேலும் படிக்க | பைபாஸில் பைக் ஸ்டண்டில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் வீடியோ வைரல்

1999ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசுகள் இயங்கியதே தி.மு.க.வின் தயவினால் தான். அத்தகைய நிலையில், அப்போதெல்லாம் கச்சத்தீவு விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இப்போது மட்டும் தனித் தீர்மானம் என்ற கண்துடைப்பு நாடகம் ஏன்? இந்தக் கேள்வியே தமிழக மக்களிடமும் எழுந்துள்ளது. அன்று முதல் இன்றுவரை ஒன்றிய அரசுக்கு, வாஞ்சையோடு வருடிக் கொடுத்து. மறைமுக அன்பை வெளிப்படுத்தும் கடிதம் எழுதும் கபட நாடகம் மட்டுமே இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் மாயாஜால வித்தை. அதிகார மையமாக இருக்கும்போதெல்லாம் கை விட்டுவிட்டு, 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், இப்போது தனித் தீர்மானம் இயற்றும் கபட நாடகத் தி.மு.க. அரசின் அந்தர் பல்டி அரசியலைத் தமிழக வெற்றிக் கழகம் கடுமையாகக் கண்டிக்கிறது.

இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் இதுவரை 800-க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். அவர்களின் உடைமைகளும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டுவிட்டன. குஜராத் போன்ற மற்ற மாநில மீனவர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக இருக்கும் ஒன்றிய அரசு. எங்கள் தமிழக மீனவர்களை மட்டும் கை விடுவது ஏன்? கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சத்துடன் பாராமுகமாகவே இருக்கிறது. எப்போதும் மீனவ நண்பனாகவே. உண்மையான உறுதியுடனும் உணர்வுடனும் நிற்கும் தமிழக வெற்றிக் கழகம். ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்தப் போக்கைத் தீர்க்கமாகக் கண்டிக்கிறது.
கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுக்குச் சொந்தமாவது மட்டுமே தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரே பரிகாரம் மற்றும் தீர்வு.

நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும். மாண்புமிகு ஒன்றிய பிரதமர் திரு.மோடி அவர்கள். கட்டாயமாக இலங்கை அரசிடம் இதை வலியுறுத்திப் பெற வேண்டும். இலங்கைத் தமிழர்களின் வாழ்வும் பாதுகாப்பும் அமைதியும் நிம்மதியும் நிரந்தரமானதாக இருக்க. பொது வாக்கெடுப்பு மட்டுமே ஒரே தீர்வு. நம் கழகத்தின் பொதுக்குழுத் தீர்மானமும், தீர்க்கமான நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பே. இந்நிலையை நோக்கி நகர, சர்வதேசச் சமூகத்தை ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும். போர்க் குற்றங்களுக்காகக் கண்டிப்பதோடு, நடுநிலையான பொது வாக்கெடுப்பு நடத்த, இலங்கை அரசுக்கு ஒன்றிய பிரதமர் அவர்கள், நேரடியான அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இலங்கை செல்லும் நம் மாண்புமிகு ஒன்றிய பிரதமர் அவர்கள், 'கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம்' என்ற பயணத் திட்டத்தை முதன்மையாக வடிவமைக்க வேண்டும். நமது மீனவர்களின் துயர் நீங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற விதத்தில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒன்றிய பிரதமரின் இந்த இலங்கைப் பயணம், தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, சமரசமின்றி இவை அனைத்தையும் வலியுறுத்துகிறேன்.

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கடைசி நேரத்தில் வராமல் போகும் - இந்த தப்பை செஞ்சிடாதீங்க..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News