திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் எல்.முருகன், திமுகாவை கடுமையாக சாடி பேசினார். மேலும், ஏ. ஆர். ரகுமான் சந்திப்பு குறித்து விளக்கினார்.

இந்தியாவில் முதல் முறையாக திருச்சியில் 206வது SPARSH குறைதீர்க்கும் முகாம் சிறப்பாக நடைபெற்றது. பாதுகாப்பு கணக்காளர் (CDA), சென்னை அலுவலகம் ஏற்பாடு செய்த 206வது SPARSH (System for Pension Administration – Raksha) குறைதீர்க்கும் முகாம் இன்று (ஜூன் 30) திருச்சி இராணுவ அணிவகுப்பு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த 4,000க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் இதில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சராக பணியாற்றும் டாக்டர் எல். முருகன் திறந்து வைத்தார். முக்கிய விருந்தினர்களாக டாக்டர் மயங்க் சர்மா, IDAS, பாதுகாப்பு கணக்குகள் துறை இயக்குநர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீர் சிங் பிரார், PVSM, AVSM, தெற்குப் பிராந்திய தலைமைச் செயலாளர் மற்றும் டி. ஜெயசீலன், IDAS, சென்னையின் பாதுகாப்பு கணக்காளர் ஆகியோர் பங்கேற்றனர்.
75 சேவை கவுன்டர்களில், கணினி, பிரிண்டர், ஸ்கேனர், விரல் ரேகை இயந்திரம் மற்றும் இணைய வசதி உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 200க்கும் மேற்பட்ட புகார் அலுவலர்கள், PCDA (பென்ஷன்), பிரயாக்ராஜ், ரெக்கார்டு அலுவலகங்கள், பொது துறை வங்கிகள், மற்றும் பிற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஓய்வூதியதாரர்களின் SPARSH தொடர்பான குறைகளை தீர்த்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் எல் முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திமுக மிகப்பெரிய தோல்வி பயத்தில் இருக்கிறார்கள். பயம் என்பதை விட பைத்தியம் பிடித்து திரிகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமிர்தாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்ததில் இருந்து பயத்தில் வாழ்க்கையை நடத்துகின்றனர்.
கொலை, கொள்ளை, லஞ்சம் லாவண்யம், போதைப் பொருள் நடமாட்டம் இதனால் மக்கள் திமுகவை உடனே வீட்டுக்கு அனுப்ப நினைக்கின்றனர். தமிழக முதல்வர் காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால் லாக்கப் மரணம் நடந்துள்ளது. 4 வருடம் செயல்படாமல் இருந்ததன் விளைவுதான் இது. புகார் கொடுக்க காவல் நிலையம் சென்று வர மக்களுக்கு பயத்தை உருவாக்கியுள்ளனர் என்றார்.
பாஜகவை அனைத்து தரப்பு மக்களும் விரும்புகின்றனர். ஈர்ப்பு வந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி தான் மிகப்பெரிய வெற்றியை தரக்கூடிய கூட்டணி.
பாஜக - அதிமுக கூட்டணியில் குழப்பம் வேண்டாம். அவசரப்பட வேண்டாம். பொறுமையாக இருங்கள். அதுகுறித்து அமித்ஷா எடப்பாடி பழனிசாமி பார்த்துகொள்வர்கள். இதே போல ஸ்டாலினிடம் கூட்டணி குறித்து கேள்வி கேட்க முடியுமா? காலை 8 மணிக்கு திருமாவளவன் துவங்குவார் மதியம் செல்வப் பெருந்தகை வழிமொழிவார், பின்னர் கம்யூனிஸ்ட் கட்சிகள் பேசும், அதற்கு அறிவாலயம் பதில் சொல்லும். இது போன்று கூட்டணி கட்சிகளுக்கு இன்னும் அஜெண்டா வரவில்லை என கூறினார்.
ஏர். ஆர். ரகுமான் சந்திப்பு குறித்து கேட்டதற்கு, துறை அமைச்சர் என்ற முறையில் ஏ.ஆர். ரகுமானின் ஸ்டூடியோவை பார்வையிட்டேன். அவரிடம் அரசியல் எதுவும் பேசவில்லை.
நடிகை மீனா குறித்த கேள்விக்கு, சினிமா துறையை சேர்ந்த பலரை நான் சந்தித்துள்ளேன். நான் சந்தித்த பின்னர் சரத்குமார், அவரது கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்தார். குஷ்புவை சந்தித்தேன். அவரும் பாஜகவில் இணைந்தார். நடிகை மீனாவும் பாஜகவில் இணைந்தால் வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது என கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ