)
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் சாலை விபத்துகளை தவிர்க்க போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அதிக அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் பலர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் அபராதங்களால் அவதிப்படும் வாகன ஓட்டிகளுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. வரும் செப்டம்பர் 13 சனிக்கிழமை அன்று, நாடு தழுவிய அளவில் தேசிய லோக் அதாலத் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றம் மூலம், வாகன ஓட்டிகள் தங்கள் மீதுள்ள போக்குவரத்து வழக்குகளை விரைவாகவும், அபராத தொகையில் கணிசமான தள்ளுபடியுடனும் தீர்த்துக்கொள்ள ஒரு பொன்னான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
நீதிமன்றங்களின் பணிச்சுமையை குறைக்கவும், மக்கள் தங்கள் வழக்குகளை சமரசமாக தீர்த்துக்கொள்ளவும் சட்ட சேவைகள் ஆணைய சட்டத்தின் கீழ் லோக் அதாலத்கள் நடத்தப்படுகின்றன. இதன் முக்கிய நோக்கமே, வழக்குகளை விரைந்து முடிவுக்கு கொண்டு வருவதாகும். போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை பொறுத்தவரை, இந்த லோக் அதாலத்தில் பங்கேற்பதால் பல நன்மைகள் உள்ளன.
அபராத தள்ளுபடி: இதுவே லோக் அதாலத்தின் மிகப்பெரிய ஈர்ப்பாகும். பல சமயங்களில், சிறிய மற்றும் பழைய அபராத தொகைகள் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படலாம் அல்லது மிக குறைந்த தொகையை செலுத்தி வழக்கை முடித்துக்கொள்ளலாம். உதாரணமாக, ரூ.10,000 அபராதம் ரூ.2,000 ஆக குறைக்கப்படவும் வாய்ப்புள்ளது.
விரைவான தீர்வு: வழக்கமான நீதிமன்றங்களை போல் அல்லாமல், ஒரே நாளில் உங்கள் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு, தீர்வு காணப்படும். லோக் அதாலத்தில் வழங்கப்படும் தீர்ப்பு, நீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது. இதன் மீது மேல்முறையீடு செய்ய முடியாது, எனவே வழக்கு உடனடியாக முடிவுக்கு வரும்.
பெரும்பாலான சிறிய போக்குவரத்து விதிமீறல்களுக்கு இந்த லோக் அதாலத்தில் தீர்வு காணலாம். உதாரணமாக ஹெல்மெட் அல்லது சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், தவறான இடத்தில் பார்க்கிங் செய்தல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், தவறான வழியில் செல்லுதல் ஆகியவற்றிற்கு சலுகை கிடைக்கலாம். ஆனால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், பந்தயங்களில் ஈடுபடுதல், மரணத்தை விளைவிக்கும் விபத்துகள் மற்றும் தீவிரமான கிரிமினல் குற்றங்களுடன் தொடர்புடைய போக்குவரத்து வழக்குகள் லோக் அதாலத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
இந்த லோக் அதாலத்தில் பங்கேற்க, ஆன்லைன் மூலம் முன்கூட்டியே பதிவு செய்வது அவசியம். தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான nalsa.gov.in அல்லது தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் இணையதளத்திற்கு சென்று, லோக் அதாலத் பதிவை தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, அபராத ரசீது, வாகனத்தின் பதிவு சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, உங்கள் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் நாள், நேரம் மற்றும் நீதிமன்ற வளாகம் அடங்கிய டோக்கன் எண் உங்கள் மின்னஞ்சல் அல்லது மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். குறிப்பிட்ட தேதியில், தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள லோக் அதாலத் அமர்வில் ஆஜராகி, உங்கள் நிலுவையில் உள்ள அபராதங்களுக்கு சுலபமாக தீர்வு காணலாம். எனவே, போக்குவரத்து அபராதம் நிலுவையில் உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ