)
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் உலக புகழ்பெற்ற கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை அக்டோபர் 27ம் தேதி திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமான், அசுரனான சூரபத்மனை வதம் செய்த நிகழ்வே சூரசம்ஹாரம் என்று கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு, திருச்செந்தூர் கடற்கரையில் மிகவும் தத்ரூபமாக நடத்தப்படும். இதை காண, தமிழ்நாடு மட்டுமின்றி, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் கூடுவார்கள்.
இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா, கடந்த அக்டோபர் 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், அக்டோபர் 27ம் தேதியும், மறுநாள் திருக்கல்யாண வைபவம், அக்டோபர் 28ம் தேதியும் நடைபெற உள்ளது. பக்தர்களின் வசதிக்காகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்யவும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அக்டோபர் 27ம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.


இந்த விடுமுறை, அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலகங்களுக்கு பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வரும் நவம்பர் 8ம் தேதி இரண்டாம் சனிக்கிழமை, தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 27 (சூரசம்ஹாரம்): அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, யாகசாலை பூஜைகள் நிறைவடையும். மாலை 4:30 மணிக்கு, சுவாமி ஜெயந்திநாதர், கடற்கரையில் எழுந்தருளி, சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும்.
அக்டோபர் 28 (திருக்கல்யாணம்): அதிகாலை நடை திறப்பை தொடர்ந்து, மாலை 6:30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்மனுக்குக் காட்சி கொடுத்து, மாலை மாற்றும் வைபவம் நடைபெறும். இரவு 11 மணிக்கு, சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெறும்.
நவம்பர் 2 (விழா நிறைவு): அக்டோபர் 29 முதல் நவம்பர் 1ம் தேதி வரை ஊஞ்சல் சேவை நடைபெறும். அதை தொடர்ந்து, நவம்பர் 2ம் தேதி, விடையாற்றி விழாவுடன், 12 நாட்கள் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழா இனிதே நிறைவுபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த விழாவிற்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதி ஏற்பாடுகளை, மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் இணைந்து தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ