பாஜக உடன் அதிமுக கூட்டணியா...? சூசகமாக பேசிய இபிஎஸ் - சொன்னது என்ன?

Edappadi Palanisamy News: கூட்டணி குறித்து எந்த கட்சியாவது நிலையாக இருந்தது உண்டா என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி முடிவாகும் என சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 26, 2025, 04:00 PM IST
  • தமிழ்நாடு அரசியலில் மாற்றங்கள் இருக்கும் - எடப்பாடி பழனிசாமி
  • திமுக ஆட்சி தமிழகத்தில் அகற்றப்படும் - எடப்பாடி பழனிசாமி
  • கூட்டணி அமைத்த பின்னரே அனைவரிடமும் சொல்லப்படும் - எடப்பாடி பழனிசாமி
பாஜக உடன் அதிமுக கூட்டணியா...? சூசகமாக பேசிய இபிஎஸ் - சொன்னது என்ன?

Edappadi Palanisamy News: தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளரும் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy Delhi Visit) நேற்று (மார்ச் 25) டெல்லி சென்றது தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியது எனலாம். அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த பின்னர், இருக்கட்சித் தலைவர்கள் மத்தியில் கடுமையான கருத்து மோதல்கள் நிகழ்ந்து வந்தன. 

Add Zee News as a Preferred Source

Edappadi Palanisamy: திமுகவுக்கு எதிராக ஒரு பலமான அணி...?

எனவே, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உருவாவதற்கான வாய்ப்புகள் குறைவு என கூறப்பட்டது. மேலும், நடிகர் விஜய் தனியே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியதால் வரும் சட்டப்பேரவை தேர்தல், நான்கு முனை தேர்தலாக அமைந்துவிடும் என்றும் இது ஆளுங்கட்சியான திமுகவுக்கே சாதகமாக அமையும் என்றும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். 

அந்த வகையில், அதிமுக - பாஜக கூட்டணி உருவானால் திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் ஓரிடத்தில் குவியும் எனவும் அரசியல் வல்லுநர்கள் கூறி வந்தனர். தவெக, நாம் தமிழர் தரப்புகள் இருந்தாலும் அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக உள்ளிட்ட இன்னும் சில கட்சிகளும் இணைய வாய்ப்பிருப்பதால் திமுகவுக்கு எதிராக ஒரு பலமான அணி உருவாகும் வாய்ப்பும் இருக்கிறது என கூறப்படுகிறது.

Edappadi Palanisamy: ஓபிஎஸ், டிடிவி, சசிகலா - நிலைபாடு என்ன? 

ஒருவேளை, அதிமுக - பாஜக கூட்டணி உருவானால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் தரப்பு மீண்டும் அதிமுகவில் இணையுமா... அல்லது பாஜக கூட்டணியில் தனித் தனி தரப்பாக நிற்குமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. தங்களுக்கு அதிமுகவிடம் எந்த ஒரு நிபந்தனையும் இல்லை என்றும் அதிமுகவில் இணைய தயாராகவே இருக்கிறோம் என்றும் பாஜக உடன் கூட்டணி வைப்பதே அனைவருக்கும் நல்லது என்றும் ஓபிஎஸ் முன்பு ஒருமுறை கூறியிருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

Edappadi Palanisamy: முக்கியத்துவம் பெற்ற அமித் ஷா - இபிஎஸ் சந்திப்பு

இந்நிலையில்தான், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் முக்கிய தலைவருமான அமித் ஷாவை, எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு சந்தித்து பேசியது பெரியளவில் கவனம் பெற்றது. அமித் ஷா - எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையிலான சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிசாமி உடன் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை, சி.வி. சண்முகம், சந்திரசேகர், அதிமுக நிர்வாகிகளான எஸ்.பி. வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோரும் உடன் இருந்தனர். அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி தனியே 15 நிமிடம் பேசி உள்ளார் என கூறப்படுகிறது.

Edappadi Palanisamy: அமித் ஷாவின் X பதிவு

எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்புக்கு பிறகு அமித் ஷா பதிவிட்ட X பதிவில்,"2026ஆம் ஆண்டில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்" என குறிப்பிட்டிருந்தார். இதன்மூலம் ஏறத்தாழ அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது என அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

Edappadi Palanisamy: சென்னை வந்தார் எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில், டெல்லியில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நான் டெல்லி சென்ற உடன் அதிமுக அலுவலகத்தை பார்வையிட்டேன். அதன்பின் அமித்ஷாவை சந்தித்து தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினைகள் குறித்து தெரிவித்துவிட்டு, கோரிக்கைகளை விடுத்தேன். அமித்ஷா சந்திப்பை நீங்கள் தான் கூட்டணியுடன் ஒப்பிட்டு சொல்கிறீர்கள், வேறு யாரும் சொல்லவில்லை.

நான் அவரை எதற்காக பார்த்தேன் என கூறியுள்ளேன். கூட்டணி குறித்து எந்த கட்சியாவது நிலையாக இருந்தது உண்டா...? தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி முடிவாகும். அரசியலில் மாற்றங்கள் இருக்கும், அதிமுக கூட்டணி அமைத்த பின்னரே அனைவரிடமும் சொல்லப்படும். மக்கள் விரோத திமுக ஆட்சி தமிழகத்தில் அகற்றப்படும்" என்றார்.  கூட்டணி ஆட்சி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி பதில் சொல்லாமல் புறப்பட்டடார்.

Edappadi Palanisamy: அமித் ஷாவை சந்தித்தது ஏன்? - இபிஎஸ்

முன்னதாக, டெல்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில்,"அதிமுக கட்சி அலுவலகத்தை பார்வையிடுவதற்காக மட்டுமே டெல்லி வந்தேன். மத்திய உள்துறை அமைச்சரிடம் நேரம் கேட்டோம், அவர் கொடுத்ததால் அவரை சந்தித்தோம். இது கூட்டணிக்கான சந்திப்பு இல்லை. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள நிதிகளை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். 

தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கை, நாடாளுமன்ற மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதையும் மத்திய உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினோம். கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சரிடம் கோரிக்கையை வைக்கப்பட்டுள்ளது.

Edappadi Palanisamy: கூட்டணி குறித்து பேசவில்லை... 

காவிரி கோரிக்கை மேகதாது அணை கட்ட மத்திய அரசு துணை நிற்கக்கூடாது என்பதையும் வலியுறுத்தினேன். முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்த தமிழ்நாடு முயற்சிக்கும் போது அதற்கு கேரளா அரசு இடையூறாக உள்ளது. தடையை நீக்கி பலப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் வலியுறுத்தினோம்.

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு, போதை பொருள் நடமாட்டம் அதிகரித்தல் மற்றும் தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம். பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறோம் அல்லது இல்லை என சொல்வதற்கு இது நேரம் அல்ல! இப்போது என்ன தேர்தலா நடக்கிறது...?. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடங்கள் உள்ள நிலையில் கூட்டணி குறித்து பேச இன்னும் காலம் உள்ளது. கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எங்களது கொள்கை எப்போதும் நிலையாக இருக்கும். தமிழகம் சார்ந்த விஷயங்களை மட்டுமே சந்திப்பின்போது பேசப்பட்டது" என்றார்.

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : பெண்களே குட் நியூஸ்! ரூ.1000 -க்கு மாதம் வட்டி பெறலாம் - தெரியுமா?

மேலும் படிக்க | தமிழ்நாடு முழுவதும் அனைத்து பேருந்துகளிலும் இலவசம் - அரசின் முக்கிய அறிவிப்பு

மேலும் படிக்க | ரேஷன் கார்டு : மக்களுக்கு 2 குட்நியூஸ் கொடுத்த தமிழ்நாடு அரசு! இனி அந்த தப்பு நடக்காது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News