Tamil Nadu News: மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு இபிஎஸ் வாழ்த்து தெரிவித்த நிலையில், அதற்கு நயினார் நாகேந்திரன் கொடுத்த பதிலை இங்கு காணலாம்.

Madurai Murugan Pakthargal Manadu: மதுரையில் ரிங் ரோடு, பாண்டிகோவில் அருகில் உள்ள அம்மா திடலில் 'முருக பக்தர்கள்' மாநாடு நாளை (ஜூன் 22) நடைபெற இருக்கிறது. இந்து முன்னணி அமைப்பு பக்தியை வளர்க்கும் விதமாக ஆன்மீக மாநாடாக இதை நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்ட தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டிற்கு பல வலதுசாரி தலைவர்கள், ஆன்மீக அன்பர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Madurai Murugan Pakthargal Manadu: நிலவும் கருத்து மோதல்
இருப்பினும் இந்த முருக பக்தர்கள் மாநாடு தமிழ்நாட்டின் அரசியல் தளத்தில் கடும் எதிர்வினையையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக, பாஜக மதத்தின் பெயரில் சமூகத்தை பிளவுப்படுத்தவே இந்த மாநாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதனால் தொடர்ந்து இருதரப்பினர் இடையே கருத்து மோதல்களும் கடந்த சில நாள்களாகவே நிலவி வருகிறது எனலாம்.
Madurai Murugan Pakthargal Manadu: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
இந்நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுகவின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதும் அரசியல் தளத்தில் உற்று கவனிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (ஜூன் 21) கோவைக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "கீழடி குறித்து ஏற்கனவே விளக்கம் கொடுத்துவிட்டேன். முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டிய ராஜன் அதற்கு தெளிவான விளக்கம் கொடுத்துவிட்டார். என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தோம் என்பது குறித்து தெளிவாக கூறிவிட்டோம்" என்றார்.
Madurai Murugan Pakthargal Manadu: ஜனநாயக உரிமை
தொடர்ந்து மதுரையில் நாளை நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக கேட்டபோது, "அவரவர் விரும்பும் கடவுள்களை வணங்குவது ஜனநாயகத்தில் அவரவர் விருப்பம்" என பதிலளித்தார். மேலும், கடவுள்களை சிறப்புமிக்கும் விதமாக பிரம்மாண்ட அந்த அமைப்பினர் நடத்துகின்றனர் என்றும் அவர்களுக்கு எனது வாழ்த்துகள் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Edappadi Palanisamy: அமித்ஷா கூறியது தனிப்பட்ட கருத்து
மேலும், 'ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் வரும்' என அமித் ஷா கூறிய கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என எடப்பாடி பழனிசாமி கூறினார். அதே சமயம் அவர் தாய் மொழி முக்கியம் என கூறி இருக்கிறார் என்றும் அனைவருக்கும் தாய் மொழி என்பது மிக மிக முக்கியம் என்றும் தெரிவித்தார். மேலும், தாய் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் விட ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்கிற பொருள்பட தான் அவர் கூறி இருக்கிறார் என்றும் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
கேலி சித்திரங்களுக்கு 2026ஆம் ஆண்டில் தக்க தண்டனை மக்கள் வழங்குவார்கள். திமுக மீது மக்களுக்கு மிகப்பெரிய கொந்தளிப்பு இருக்கிறது. அதனை மறைப்பதற்காக கேலிச்சித்திரங்கள், அவதூறுகளை பரப்பி வருகின்றனர். யோகா என்பது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. அதனை பிரதமர் முன்னெடுத்து வருவது அதற்கு வாழ்த்துகள்" என பதில் அளித்து சென்றார்.
Nainar Nagendran: 'எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி'
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கருத்தை வரவேற்றுள்ள தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நயினார் நாகேந்திரன் போட்ட X பதிவில், "மதுரை மாநகரில் முருக பக்தர்கள் மாநாடு விமரிசையாக நடைபெற வாழ்த்து தெரிவித்துள்ள அஇஅதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் எடப்பாடி கே. பழனிசாமி மிகச்சரியாக குறிப்பிட்டதைப் போல, விரும்பும் தெய்வங்களை வழிபடுவது அவரவரின் ஜனநாயக உரிமை என்பதை எல்லோரும் உணர வேண்டும். எனவே, கட்சி பேதமின்றி, ஆன்மீக நோக்கத்துடன் நாளை நடைபெற இருக்கும் இம்மாநாட்டில் உலகெங்கும் இருக்கும் முருக பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ