)
Madras High Court: சென்னை தி.நகர் தொகுதியில், வாக்குச் சாவடி அதிகாரிகளாக உள்ள திமுகவினர், ஆளுங்கட்சிக்கு சாதகமாக, 13 ஆயிரம் அதிமுக ஆதரவாளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாகக் கூறி, அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சத்தியநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 1998ஆம் ஆண்டு தி.நகர் தொகுதியில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 349 வாக்காளர்கள் இருந்த நிலையில், 30 ஆண்டுகளுக்கு பிறகு, 2021ஆம் ஆண்டு வெறும் 36 ஆயிரத்து 656 வாக்காளர்கள் மட்டுமே அதிகரித்துள்ளனர். மக்கள் தொகைக்கும், வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், தொகுதியில் அதிமுக ஆதரவாளர்கள் 13 ஆயிரம் பேரின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. இதுசம்பந்தமாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன், தி.நகர் தொகுதியில் வாக்காளர் பட்டியலை மீண்டும் சரி பார்த்து, தவறான சேர்க்கை, நீக்கத்தை களைந்து இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் இன்று (அக். 24) விசாரணைக்கு வந்தது. இதில் மனுதாரர் தரப்பு, "தி.நகர் தொகுதியில் மொத்தமாக வாக்காளர்கள் சேர்க்கையும், நீக்கமும் நடந்துள்ளதால், அவற்றை சரிபார்த்து திருத்தக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு பல மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுசம்பந்தமாக தமிழில் உள்ள ஆவணங்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய ஏதுவாக விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்" என வாதிடப்பட்டது.
தேர்தல் ஆணையம் தரப்பில், "நாடு முழுவதும் தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், பீகாரைப் போன்ற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், அடுத்த வாரம் தொடங்க உள்ளது. அப்போது, மனுதாரர் தெரிவித்த புகார்கள் கவனிக்கப்படும்" என வாதிடப்பட்டது.
மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், பீகார் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகல்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ